'நயவஞ்சகன் உட்கார்ந்து கொண்டு சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணைவைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான். சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி எடுக்கின்றான். (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப் போல) அவன் தன் தொழுகையில் இறைவனை சிறிதும் நினைவு கூர்வதில்லை. இது நயவஞ்சகனின் தொழுகையாகும்'
(ரக்அத் - இது தொழுகையின் ஒரு பகுதியாகும். இதில் தொழுபவர் இறைவன் முன் தலைகுனிந்து கைகட்டிக் கொண்டு நிற்கின்றார், ஓதுகின்றார். பிறகு ருகூவும், ஸுஜூதும் செய்கின்றார்)
இறைநம்பிக்கையாளன், நயவஞ்சகன் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள தொழுகை முற்றிலும் வேறுபட்டது. இறைநம்பிக்கையாளன் சரியான நேரத்திற்கு தொழுகையில் ஈடுபடுவான். ருகூவும், ஸுஜூதும் ஒழுங்காகச் செய்வான். அவனது உள்ளம் இறைநினைவிலேயே லயித்திருக்கும். நயவஞ்சகனோ சரியான நேரப்படி தொழுகையில் ஈடுபட மாட்டான்.
அனைத்து தொழுகையும் முக்கியம் என்றாலும் ஸுப்ஹு (அதிகாலை) தொழுகை, அஸ்ரு (மாலை) தொழுகை சிறப்பானவை. பொதுவாக இந்த நேரத்தில்தான் மக்கள் அன்றாட பணிகளில் மும்முரமாக இருப்பார்கள் என்பதால் மறந்துவிட வாய்ப்புண்டு. இரவு வருவதற்குள் அன்றாட கொடுக்கல் வாங்கலை முடிக்கவும், பணிகளை விரைந்து செய்யவும் விரும்புவார்கள். இறைநம்பிக்கையாளன் விழிப்புடன் இருக்கத் தவறினால் 'அஸ்ரு' தொழுகையை நிறைவேற்றாமல் போகும் ஆபத்திற்கு ஆளாகலாம். ஸுப்ஹூ தொழுகையின் முக்கியத்துவத்திற்குக் காரணம் இதற்குரிய நேரம் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம். இரவின் இறுதிப்பகுதியில் வரும் உறக்கம் ஆழ்ந்ததாக இருக்கும். இந்நேரத்தில் இறைநம்பிக்கை உயிர்த்துடிப்புடன் இல்லாவிட்டால் உறக்கத்தை கைவிட்டு அவனை நினைவு கூர்வதற்காக எழ முடியாது.