ADDED : பிப் 09, 2024 11:23 AM
மெக்காவில் இருந்த குரைஷி இனத்தவரால் முஸ்லிம்கள் துன்பத்திற்கு ஆளாயினர். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த இவர்கள் ஒரு கட்டத்தில் அங்கிருந்து துரத்தப்பட்டு மெதீனாவுக்கு வெறுங்கையோடு வந்தனர். இவர்களை 'முஹாஜிரீன்' (குடிபெயர்ந்தோர்) என்பர். இவர்களுக்கு மெதீனாவில் வாழ்ந்து வந்த அன்சாரிகளின்(இறை நம்பிக்கையாளர்கள்) இல்லங்களே விருந்தளிக்கும் வீடுகளாகத் திகழ்ந்தன. இருந்தாலும் இவர்கள் பிறருடைய தயவில் வாழ விரும்பாமல் உழைத்து சாப்பிட்டனர்.
ஒருநாள் புதிய பள்ளிவாசலில் அன்சாரிகளையும், குடிபெயர்ந்தோர்களையும் அழைத்தார் நபிகள் நாயகம். பின் ஒவ்வொரு அன்சாரியிடமும் ஒரு முஹாஜிரைக் காட்டி 'இவர் உம்முடைய சகோதரர்' எனக் கூறி அவர்களுக்குள் பிணைப்பையும்,
சகோதரப் பாசத்தையும் வலியுறுத்தினார். அன்று முதல் அன்சாரிகள் தங்கள் பொருட்களை இவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். பின் நாயகத்திடம், ''எங்களுடைய தோட்டங்களை முஹாஜிரீன்களுக்கு சரிபாதியாகப் பிரித்துக் கொடுங்கள்'' என்று கேட்டனர்.
முஹாஜிரீன்கள் வியாபாரத்தில் மட்டுமே பழக்கமானவர்கள். ஆகையால் தோட்டங்களை இவர்களுக்குக் கொடுப்பதால் பயனில்லை எனக் கருதிய நாயகம் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
அதன்பின் உண்மையை புரிந்து கொண்டவர்கள், ''நாங்களே விவசாயம் உள்ளிட்ட வேலைகளைச் செய்கிறோம். வரும் வருமானத்தில் முஹாஜிரீன்கள் பாதியை எடுத்துக் கொள்ளட்டும்'' எனத் தெரிவிக்க அவர்களும் சம்மதித்தனர்.