ஒருமுறை மெதீனாவைத் தாக்க முஸ்லிம்களின் எதிரிகளான குரைஷிகள் புறப்பட்டனர். நபிகள் நாயகம் இதை தோழர்களிடம் தெரிவித்த போது அபூபக்கர், 'தங்களுக்காக உயிரையும் தருவேன்' என வாக்களித்தார். கஸ்ரஜ் கூட்டத்தின் தலைவரோ, 'தாங்கள் கட்டளைக்காக காத்திருக்கிறோம்' என்றார்.
குரைஷிகளை எதிர்க்க இறைவனிடம் இருந்து அனுமதியும் கிடைத்தது. உடனே ஆதரவாளர்களுடன் மெதீனாவில் இருந்து புறப்பட்டார். அப்போது அக்கூட்டத்தில் இருந்த சிறுவர்களை திரும்பி போகும்படி கூறினார்.
மெதீனாவை மேற்பார்வை செய்யும்படி அபூலுபாபா என்பவரை நியமித்தார்.
'பத்ரு' பள்ளத்தாக்கு வழியாக குரைஷிகள் பெரும் படையுடன் வந்தனர். இவர்கள் முன்னதாகவே வந்ததால் வசதியான இடங்களில் தங்கியிருந்தனர். நாயகம் சிறிய படையுடன் அங்கு சென்றதால் தண்ணீர் வசதி கூட இல்லாத இடமே அவருக்கு கிடைத்தது. அப்பொழுது ஹூபாப் என்பவர், ''இந்த இடத்தைத் தேர்வு செய்தது இறைவன் அறிவிப்பு மூலமா அல்லது போர்த் தந்திரத்தை அனுசரித்தா?'' எனக் கேட்டார். அதற்கு அவர், ''இரண்டுமே இல்லை'' என்றார்.
இதனால் வேறிடத்திற்கு முன்னேறினர். அந்த நேரத்தில் அவர்களின் மனம் குளிர மழை பெய்யவே குடிக்க நீர் கிடைத்தது.