
'நல்லதைச் செய்யுங்கள். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள்' என உபதேசம் செய்பவர்களில் சிலர் அதைப் பின்பற்ற மாட்டார்கள். உதாரணமாக அரசியல்வாதிகள்
மேடைகளில், 'நான் மக்களுக்கு வேண்டியதை செய்கிறேன். நல்ல திட்டங்களை உருவாக்குகிறேன்' என முழக்கமிடுவர். ஆனால் பதவிக்கு வந்ததும் வாக்கை காற்றில் பறக்க விடுவர். இவர்களைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?
சொல்லும், செயலும் வெவ்வேறாக இருந்தால் இறுதித் தீர்ப்பு நாளில் நரக நெருப்பில் துாக்கி வீசப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். அந்தக் குடலை கையில் எடுத்துக் கொண்டு நரகத்தை சுற்ற வேண்டியிருக்கும். இதைப் பார்க்கும் மற்ற நரகவாசிகள், 'உனக்கு இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது? உலகில் நன்மைகள் செய்யும்படி எங்களுக்கு உபதேசம் செய்தாயே... பிறகு ஏன் இங்கு வந்தாய்' எனக் கேட்பார்கள்.
அதற்கு அவன், 'நான் சொன்னபடி செயல்படவில்லை. மாறாக மக்களுக்கு துரோகம் செய்தேன்' என்பான்.
உபதேசம் செய்வதை விட முதலில் அதற்கு உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.