ADDED : ஜூன் 14, 2024 01:08 PM

ஜூன் 17, 2024 - பக்ரீத்
அன்பின் மார்க்கத்தை போதித்த நபி ஹஜ்ரத் இப்ராகிம். இவர் நம்ரூத் என்ற கொடுங்கோல் மன்னனின் ஆட்சிக் காலத்தில் பிறந்தவர். 'இறைவனே எல்லாம்; அவனுக்கு இணையாக ஏதுமில்லை' என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்தார். நீண்ட காலமாக குழந்தை இல்லாத இவருக்கு இஸ்மாயில் பிறந்தார்.
ஒருநாள் இரவில் நபி இப்ராகிம் தன் மகனை இறைவனுக்கு பலி கொடுப்பதாக கனவு கண்டார். இது பற்றி அவனிடம் சொன்னார். அதற்கு அவன், 'இறைவனுக்காக என் உயிர் என்ன? அனைவரையும் கூட குர்பானி (பலி) செய்யத் தயாராக இருக்கிறேன்' என்றார் இஸ்மாயில். மேலும் அவர், 'என்னை குர்பானி செய்யும் போது என்னை குப்புறப் படுக்கச் செய்யுங்கள். பிள்ளைப் பாசத்தால் செயல் தடைபடக் கூடாது' என்றார். அதன்படி மகனின் கை, கால்களைத் கயிறால் கட்டி, கத்தியால் கழுத்தை அறுக்க முயன்றார்.
அந்நேரத்தில் வானவரான ஜிப்ரீல் தோன்றி அதைத் தடுத்தார். அவர்களுக்கு அருகில் செம்மறி ஆடு ஒன்று நின்றிருந்தது. வெள்ளை, கருப்பு நிறத்துடன் காணப்பட்டது. 'இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலியிடு. அனைவருக்கும் பகிர்ந்து கொடு' என கட்டளை வந்தது. இந்நாளையே பக்ரீத் ஆக கொண்டாடுகின்றனர்