ADDED : ஜன 04, 2023 11:10 AM

மன்னரின் அன்பினை பெற்ற முல்லாவிற்கு அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் வீட்டினையும் மேல்வீட்டை படைத்தளபதிக்கும் கொடுத்திருந்தார்.
தளபதியின் மனைவி அடிக்கடி கல்உரலில் மாவு இடிப்பாள். அப்போது முல்லா வசிக்கும் வீடே அதிரும்.
முல்லா இரண்டு மூன்று முறை தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்க உங்களது மனைவியிடம் சொல்லுங்கள் எனக்கேட்டுக் கொண்டார். அதற்கு அவரோ ''கோபத்துடன் இந்த வீடு எனக்குச் சொந்தமானது. என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்?” என முல்லாவை அதட்டி அனுப்பினார்.
மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுச்சுவற்றை கடப்பாறையால் குடைந்து கொண்டிருந்தார். தளபதி என்ன செய்கிறாய்? எனக் கேட்டார். கீழே உள்ள என் வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்ட போகிறேன் என்றார் முல்லா. அப்பதிலை கேட்ட தளபதிக்கு முல்லாவின் புத்திசாலித்தனம் விளங்கியது. தன்னுடைய வீண்பிடிவாதத்தை விடுத்தார்.
முல்லாவிடம் நாம் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருவரும் அனுசரித்தச் செல்வது நல்லது. நாம் நண்பர்கள் என இனிய வார்த்தை பேசினார்.
''நான் எப்போதுமே யாருக்கும் நண்பன் தான்” என கூறிய முல்லா தன் வீட்டிற்குள் சென்றார்.

