
அறிஞர் ஒருவர் மலைப்பாதை வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் அசைவற்று ஒருவன் கிடப்பதைப் பார்த்தார் அவர். இரக்கப்பட்டு தன்னிடம் இருந்த குடுவைத் தண்ணீரை அவனது முகத்தில் தெளித்தார். அவனை எழுப்பி குதிரையின் மீது ஏற்றினார். கண் இமைக்கும் நேரத்தில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து அவன் இழுப்புக்கு குதிரை சிட்டாய் பறந்து மறைந்தது. அவன் திருடன் என அப்போது தான் அறிஞருக்கு தெரிந்தது. இரவு முழுவதும் நடந்தே கிராமத்திற்கு வந்த அவர் மறுநாள் தனக்கு குதிரை வாங்கச் சந்தைக்கு சென்றார். அங்கு அந்தத் திருடன் குதிரையுடன் நிற்பதை பார்த்த அவர், அவன் தோளை மெதுவாக தொட்டார். அவனுக்கு உள்ளூற பயம் தொற்றியது.
அவனிடம் ''இந்த குதிரையை அடைந்த விதத்தை யாரிடமும் சொல்லாதே. எதிர்காலத்தில் உண்மையில் வேறு யாராவது மயங்கி கிடந்தால் உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள். நான் இன்னும் சில தினங்களில் உழைத்து மற்றொரு குதிரையை வாங்கிக் கொள்வேன். இந்த குதிரையை நீயே வைத்துக்கொள். தீயவன் தவறு செய்ய நல்லவர்கள் பலருக்கு காலத்திற்கும் உதவி கிடைக்காமல் உயிர் போகக்கூடும் புரிகிறதா'' என்றார்.
திருடனின் கண்கள் கலங்கின. குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளை சிதைத்து விடாதீர்கள்.

