ADDED : அக் 06, 2023 03:09 PM

நபிகள் நாயகம் மெதீனா நகரம் வந்த பின்னர் அபுத்தர்தா, ஸல்மான் ஃபார்ஸி என்பவர்களை சகோதரர்களாக ஆக்கியிருந்தார். ஒருநாள் அபுத்தர்தாவின் வீட்டிற்கு சென்றார் ஸல்மான். அப்போது அபுத்தர்தாவின் மனைவி உம்முத்தர்தா அலங்காரம் எதுவும் இல்லாமல் சாதாரண உடையில் இருப்பதை கண்டார்.
உடனே ஸல்மான், ''ஏன் இப்படி விதவைப் பெண்களைப் போல் உங்களை ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்'' எனக்கேட்டார்.
அதற்கு அவர், ''உங்கள் சகோதரர் அபுத்தர்தாவுக்கு உலகைப்பற்றிய ஆர்வமே இல்லை. பின் யாருக்காக என்னை அலங்கரித்துக் கொள்வது'' என உடைந்த குரலில் கூறினார்.
பின் அபுத்தர்தா வீட்டிற்கு வந்ததும், விருந்தினராக வந்த சகோதரருக்கு உணவு தயாரிக்கும்படி சொன்னார். சிறிது நேரத்தில் உணவும் தயாரானது. அபுத்தர்தா, ''நீங்கள் சாப்பிடுங்கள். நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'' என ஸல்மானிடம் கூறினார். அதற்கு அவர், ''நீங்கள் சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடுவேன்'' என பிடிவாதம் பிடித்தார். அவரும் வேறுவழியின்றி நோன்பை முறித்துக் கொண்டு சாப்பிட்டார். பின்னர் இரவில் நஃபில் தொழுகைக்காக எழுந்த அபுத்தர்தாவை, கட்டாயப்படுத்தி உறங்க வைத்தார் ஸல்மான்.
பின் நள்ளிரவில் அபுத்தர்தாவை எழுப்பி, சில அறிவுரையை கூறினார்.
''பாருங்கள். உங்கள் மீது இறைவனுக்கும், ஆன்மாவுக்கும், மனைவிக்கும் உரிமை உண்டு. அதை நிறைவேற்றுங்கள்'' என்றார்.
பின் நடந்தவற்றை நாயகத்திடம் கூறினார் ஸல்மான். அதற்கு அவரும், ''தாங்கள் கூறியது உண்மையே'' என்றார்.