
ஒருநாள் மூன்று நண்பர்கள் மழையில் சிக்கியதால், அருகில் தெரிந்த குகைக்கு சென்றனர். அந்நேரத்தில் எங்கிருந்தோ உருண்டு வந்த பாறை குகையின் வாசலை மூடியது. எவ்வளவோ முயன்றும் பாறையை அசைக்க முடியவில்லை. இறுதியாக இறைவனிடம் தாங்கள் செய்த நற்செயல்களை குறிப்பிட்டு பிரார்த்திக்க ஆரம்பித்தனர்.
முதலாமவர்: 'என்னுடைய நிலத்தில் வேலை செய்துவிட்டு கூலி வாங்காமல் சென்றார் ஒருவர். அவருக்கு தர வேண்டிய கூலிக்கான நெல்லைப் பயன்படுத்தி மீண்டும் விவசாயம் செய்தேன். அதில் வந்த வருமானத்தை வைத்து மாடுகள் வாங்கினேன். நீண்ட நாள் கழித்து வந்த அவர் கூலியைக் கேட்டார். அதற்கு நடந்ததை கூறி, மாடுகளை ஓட்டிச் செல்லுமாறு கூறினேன். உன் மீதுள்ள பயத்தின் காரணமாகவே இதைச் செய்தேன். இது உண்மையானால் பாறையை விலக்குவாயாக' என்றார். பாறை சற்றே அசைந்தது.
இரண்டாமவர்: 'வயதான என் பெற்றோருக்கு தினமும் இரவு பால் வாங்கிச் செல்வேன். ஒருநாள் தாமதமாக சென்றதால் அவர்கள் துாங்கிவிட்டனர். இரவு முழுவதும் விழித்திருந்தேன். இறைவா. உன் மீதுள்ள பயத்தினால் இவ்வாறு செய்தேன். எனக்கு வழிகாட்டுவாயாக' என்றார். பாறை சற்றே நகர்ந்தது.
மூன்றாமவர்: 'திருமணமாகாத அத்தை மகளை நெருங்கியபோது, 'இறைவனுக்கு அஞ்சிக்கொள். திருமணம் செய்யாமல் என்னை நெருங்காதே' என்றாள். நான் விலகிவிட்டேன். இறைவா. உன் மீதுள்ள பயத்தினால் இவ்வாறு செய்தேன். எனக்கு வழிகாட்டு' என்றார். பாறை முழுமையாக அகன்றது. மூவரும் அவனுக்கு நன்றி கூறி வெளியேறினர்.
இது நபிகள் நாயகம் தன் தோழர்களுக்கு கூறிய கதை. 'இறைவனுக்காக நல்ல செயல்களை செய்தால் அவனை நெருங்கலாம்' என்றார்.