ADDED : செப் 19, 2023 12:38 PM
இஸ்லாமியர்களிடம் கீழ்க்கண்டவாறு நபிகள் நாயகம் கூறினார்:
நான் (கவ்ஸர் எனும்) தடாகத்தை உங்களுக்கு முன் சென்றடைவேன். அங்கு உங்களை வரவேற்று தண்ணீர் புகட்டுவதற்கான ஏற்பாட்டினைச் செய்வேன். என்னிடம் வருபவர்கள் (கவ்ஸரின் நீரை) அருந்துவார்கள். அதனைப் பருகியவர்களுக்கு ஒருபோதும் தாகம் ஏற்படாது.
ஆனால் என்னிடம் வரும் சிலரை அடையாளம் கண்டு கொள்வேன்.
அவர்களும் என்னை யார் என்று புரிந்துகொள்வார்கள். ஆயினும் என்னை அடையமுடியாதவாறு அவர்கள் தடுக்கப்படுவார்கள்.
அப்போது, 'இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்தான். என்னிடம் வர அனுமதியுங்கள்' என்று கூறுவேன். அதற்கு, 'உங்களின் மரணத்திற்குப்பின் நீங்கள் கொணர்ந்த தீனில் (வாழ்க்கை நெறியில்) பல புதிய பித்அத்களை (அநாச்சாரங்களை) இவர்கள் நுழைத்ததை அறியமாட்டீர்கள்' என்று என்னிடம் சொல்லப்படும். 'அவ்வாறாயின் தீனுடைய அமைப்பையே சீர்குலைத்த அவர்கள் தொலைந்து போகட்டும்' என்று கூறுவேன்.
அதாவது இந்த ஹதீஸ் சொல்லும் செய்தி இதுதான். தான் கொண்டு வந்த தீனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயலாற்றிவர்களை நபிகள் நாயகம் அங்கு வரவேற்பார். யார் வேண்டுமென்றே தீனுக்கு எதிரான புது விஷயங்களை தீன் என்ற பெயரில் நுழைக்கிறாரோ, அவர் 'கவ்ஸர்' என்னும் தண்ணீரைப் பருகும் பேற்றினை இழப்பார்.