
அது ஒரு இசைவகுப்பு. அங்கு ஆர்வக்கோளாறுடைய மாணவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களுக்கு நிதானம் என்றால் என்ன என்பதை எப்படி புரிய வைப்பது என யோசித்தார் ஆசிரியர். அருகிலுள்ள மண்டபத்தில் கலை சாதனங்கள் தொடர்புடைய கண்காட்சி நடந்து கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றார். புல்லாங்குழல், மிருதங்கம் என ஒவ்வொரு பொருளாக மாணவர்கள் எடுத்து உபயோகப்படுத்தி பார்த்து வந்தனர். அதில் ஒரு குறும்புக்கார மாணவன் வீணையை எடுத்து நரம்புகளை இறுக்குவதும், லுாசாக்குவதுமாகச் செய்து மீட்டிப் பார்த்தான். அதில் இருந்து இனிய ஓசை எழும்பவே இல்லை. இதை எல்லாம் கண்காணித்த ஆசிரியர் அனைவரையும் அழைத்தார். வீணை நரம்புகளை சரி செய்து சரியாக வைத்து மீட்டிக் காண்பித்தார். நிதானத்துடனும், பொறுமையுடனும் செய்யும் எந்தச்செயலும் நிறைவை தரும் என அறிவுரை வழங்கினார். அதனை ஏற்ற மாணவர்கள் அனைவரும் உண்மையை உணர்ந்தனர்.

