ADDED : அக் 27, 2015 11:09 AM

நீங்கள் பல சோதனைகளை அனுபவிக்கிறீர்கள். அல்லாஹ்விடம் முறையிட்டும், பலமுறை தொழுதும் பயனில்லையே என தவிக்கிறீர்களா! அப்படியானால், நீங்கள் அவனது கோபத்திற்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்று பொருள்.
'நிச்சயமாக அல்லாஹ் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ அதனை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான்,'' என்று நபிகள் நாயகம் சொல்கிறார்.
இறைவனால் விலக்கப்பட்டதில் முக்கிய இடம் வகிப்பது பொய். யாரொருவன் பொய் சொல்கிறானோ அவன் நிச்சயமாக அல்லாஹ் தரும் சோதனைகளை கடுமையாக அனுபவித்துக் கொண்டிருப்பான்.
'ஜனங்களை சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கூட கேடு விளையட்டும், அவன் நாசமாகட்டும்' என்று சாபம் கொடுக்கிறார்
நபிகளார். பொய்யை அந்த அளவுக்கு கடுமையாக வெறுக்கிறார் அவர். உண்மையின் பெருமையை விளக்க அவர் தந்த கருத்துக்கள் இதோ!
* உண்மை பேசுவது மனிதனை நன்மையின் பக்கம் இழுத்துச் செல்கிறது. நன்மை சொர்க்கத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது.
நிச்சயமாக ஒருவன் உண்மையே பேசிக்கொண்டிருந்தால், இறைவனிடத்தில் சித்தீக் (உண்மையாளர்) என்று எழுதப்பட்டு விடும்.
* பொய் சொல்வது மனிதனை பாவங்களின் பக்கம் இழுத்துச் செல்கிறது. பாவங்கள் அவனை நரகத்தின் பக்கம் இழுத்துச்
செல்கிறது. நிச்சயமாக, ஒருவன் பொய்யே பேசி வருகிறான். இறுதியில், இறைவனிடம் அவன் பொய்யன் என்று எழுதப்பட்டு விடுகிறான்.
* ஒரு மனிதன் ஒரு பொய்யைச் சொன்னால் அந்தப் பொய்யின் வாசனை வானவர்களை ஒரு மைலுக்கு அப்பால் நிறுத்தி விடுகிறது.
(இறைவனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் வானவர்கள் மூலம் நமக்கு வரும். பொய் பேசுபவர்களால் அந்த நன்மையை அடைய முடியாது)
* நீங்கள் உண்மை பேசுவதைக் கடைபிடிப்பீர்களாக! ஏனென்றால், அது சொர்க்கத்து வாசல்களில் ஒன்றாகும். நீங்கள் பொய் பேசுவதைப் பற்றி எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது நரக வாசல்களில் ஒன்றாகும்.
உண்மையின் பெருமையை உணர்ந்த பிறகும், எடுத்ததற்கெல்லாம் பொய் பேசும் வழக்கத்தை விட்டொழிப்போம்.