ADDED : பிப் 28, 2025 07:55 AM
ஆட்சியாளராக இருந்த உமர், நாட்டை பல பகுதிகளாக பிரித்து, அந்தந்த பகுதிக்கு தலைவர்களை நியமித்தார். அவர் எப்படி ஆட்சி செய்கிறார் என அவ்வப்போது மக்களிடம் விசாரிப்பார். ஒருநாள் ஹிம்ஸ் பிரதேசத்திற்கு அவர் சென்ற போது மக்கள் தங்களின் தலைவர் ஸஅத் குறித்து நான்கு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
1. அதிகாலையில் எங்களை சந்திக்க வருவதில்லை. பகல் நேரத்தில் தான் வருவார்.
2. எங்கள் பிரச்னைகளை பற்றி சொன்னாலும் இரவில் கேட்க மாட்டார்.
3. மாதத்தில் இரண்டு நாள் எங்களை சந்திக்கவே மாட்டார்.
4. அடிக்கடி பலவீனத்தால் மயங்கி விழுகிறார்'' என மக்கள் புகார் கூறினர்.
இது பற்றி ஸஅத்திடம் விளக்கம் கேட்டார் உமர்.
அதற்கு அவர், ''கலீபா (மன்னர்)அவர்களே... என் வீட்டில் பணியாட்கள் நியமிக்கவில்லை. வீட்டு வேலைகளை நானே செய்தாக வேண்டும். காலையில் மாவு அரைத்து, ரொட்டி சுடுவது என் பணி. அதன் பிறகே மக்கள் பணிக்கு புறப்படுவேன். இரவில் தொழுகையில் ஈடுபடுவதால் மக்களிடம் பேச நேரம் இல்லை. மாதத்தில் இரு நாள் ஆடையை துவைப்பதற்காக ஒதுக்குகிறேன்.
என் கண் முன்னே அம்புகளால் துளைக்கப்பட்டு உயிர் நீத்தார் தோழர் ஹுபைப். அவருக்கு உதவி செய்ய என்னால் முடியவில்லையே என அடிக்கடி வருந்துவேன். அந்த நேரத்தில் மயக்கம் வருவதால் விழுகிறேன்'' என்றார்.இந்த பதில்களைக் கேட்டதும் உமரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.