sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

ஜோதிடம் என்பது உண்மையா?

/

ஜோதிடம் என்பது உண்மையா?

ஜோதிடம் என்பது உண்மையா?

ஜோதிடம் என்பது உண்மையா?


PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன் சிறு வயதில் ஒரு ஜோதிடர் தன்னைப் பார்த்துச் சொன்ன ஆரூடம் பலித்ததை இந்தக் கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு. அப்படியென்றால் 'ஆரூடமும் ஜோசியமும் உண்மையா?' என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அதற்கான பதிலையும் தருகிறது இக்கட்டுரை…

சத்குரு:


வடக்கு கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இருக்கிறார்கள். உங்கள் முகத்தைப் பார்த்தே உங்கள் இறந்தகாலம் என்னவாக இருந்தது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று சொல்லக்கூடியவர்கள். அவர்கள் ஞானிகள் அல்லர். போதகர்கள் அல்லர். ஆனால், அவர்கள் சொல்வது நம்புவதற்குக் கடினமான அளவுக்கு கச்சிதமாக இருக்கும். அவர்களிடத்தில் இயல்பாகவே அந்தத் திறமை இருக்கிறது.

எனக்கு 17 வயது இருக்கும்போது, என் தமக்கையின் திருமணம் தொடர்பாக வீட்டுக்கு ஒரு ஜோசியர் வந்திருந்தார். அவர் என் முகத்தைப் பார்த்தார். 'நீ ஒரு கோயில் கட்டுவாய்' என்றார். 'கோயில்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருக்கும் கோயில்களுக்குள் நுழைந்ததுகூட இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் கோவில்களைத் தகர்ப்பேனே தவிர, நானாவது கோயில் கட்டுவதாவது' என்று அதை நிராகரித்தேன்.

ஆனால், ஏழெட்டு வருடங்களில் தியானலிங்கம் கோயில் கட்டுவது என்று தீர்மானித்தபோது, அன்றைக்கு வீட்டுக்கு வந்த ஜோசியர் பற்றி நினைத்து ஆச்சர்யப்பட்டேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டதற்காக வருத்தப்பட்டேன்.

வெறும் பத்துக்கும், இருபதுக்கும் ஆரூடம் சொல்பவர் ஒருவருக்கு முன்கூட்டித் தெரிந்திருந்த ஒரு விஷயம் எனக்குத் தெரியவில்லையே என்று அவமானகரமாக உணர்ந்தேன். ஏன் அப்படி ஆனது? கோயில்கள் பற்றி எனக்கு இருந்த அவநம்பிக்கையில் அமிழ்ந்து இருந்ததால், என் பார்வை பழுதாகிவிட்டதைப் புரிந்து கொண்டேன்.

சுய விருப்பு-வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால்தான், தெளிவு கிடைக்கும். கண்மூடித்தனமாக எதையும் ஆதரிக்கவும் கூடாது, எதையும் நிராகரிக்கவும் கூடாது என்று புரிந்து கொண்டேன்.

தென் இந்தியாவில் சில குடுகுடுப்பைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சில சமயம் சில காட்சிகள் தோன்றும். தங்களால் பார்க்க முடிந்ததை விடிவதற்குச் சற்று முன்பாகவே உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்று அறிவித்துவிட்டுப் போவார்கள். நீங்கள் அதை நம்புவீர்களா, மாட்டீர்களா என்பது அவர்கள் பிரச்சனை அல்ல. உங்களிடம் பணம் கேட்டுக் கூட அவர்கள் நிற்கமாட்டார்கள்.

அப்படிப்பட்டவர்கள் இப்போது அருகிவிட்டார்கள். மூடநம்பிக்கையை சார்ந்திருக்கும் ஜோசியர்கள் பெருகிவிட்டார்கள். கிரகங்களைக் கட்டங்களில் சிறைப்படுத்தி, உங்கள் எதிர்காலத்தை இவர்கள் தீர்மானிக்கப் பார்ப்பார்கள்.

ஒரு கைக்குட்டைக்குக்கூட சில அதிர்வுகள் உண்டு. அந்த விதத்தில் நட்சத்திரங்கள், கோளங்கள், கிரகங்கள் இவற்றுக்கும் அதிர்வுகள் உண்டு. பூமி மீது கொஞ்சம் ஆதிக்கம் உண்டு. அதற்காக, உயிரற்ற அந்த ஜடப்பொருள்கள் உயிருள்ள நம் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடுவதா?

உங்களுக்குத் தெளிவும், ஸ்திரத் தன்மையும் இல்லையென்றால், எது வேண்டுமானாலும் உங்களை ஆட்டி வைக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ள உயிரற்ற ஜடப்பொருள்கள் தங்களைப் போல் உங்களை ஆக்குவதற்கு முயற்சி செய்தால், அதற்குப் பணிந்து போவீர்களா? அல்லது புத்திசாலித்தனத்துடன் உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்வீர்களா? நீங்கள் உறுதியாக இருந்தால் உங்களை எந்தக் கிரகம் என்ன செய்துவிட முடியும்? எந்தச் சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருந்தால், நீங்கள் பயப்படமாட்டீர்கள்.

இந்திய எல்லையில், ஆர்மி அவுட் போஸ்ட். அங்கே சங்கரன்பிள்ளைதான் மேஜர்.

ஒருநாள், ஒரு சிப்பாய் பதைப்பதைப்புடன் ஓடி வந்தான். சல்யூட் அடித்தான். 'மேஜர், நம் கூடாரங்களை எதிரி ராணுவத்தினர் எல்லாப் பக்கங்களிலும் சூழந்துவிட்டனர்' எனப் பதறினான். சங்கரன்பிள்ளை தன்னம்பிக்கை மிளிர, உற்சாகத்தோடு சொன்னார், 'நல்லதாகப் போயிற்று. எந்தத் திசை பார்த்துச் சுட்டாலும், ஓர் எதிரி வீழ்வானே!'

நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்றோ, எப்படி வாழ வேண்டும் என்றோ யாரோ ஒருவர் காகிதத்தில் எழுதிக் கொடுத்துவிடுவார். அதன்படி வாழ்வீர்கள் என்றால், உங்களுடைய புத்திசாலித்தனத்தை அடமானம் வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

விழிப்புணர்வு இல்லாமல், நீங்கள் தூவிய பல விதைகள்தான் பூச்செடிகளாகவும், விஷச் செடிகளாகவும் உங்களைச் சுற்றி வளர்ந்து நிற்கின்றன. நீங்களே அவற்றுக்கு வழி கொடுத்தீர்கள் என்பதை நீங்கள் உணர்வதில்லை என்பதுதான் பிரச்சனை.

கிரகங்கள் எப்படி நகரும் என்பது கணிக்கக்கூடியது. ஆனால், மனிதனையும் முன்கூட்டியே கணிப்பது அவனை ஜடப்பொருளாகக் கருதுவதற்குச் சமம். விழிப்புணர்வுடன் இருந்தால், உங்களை முன்கூட்டி யாரும் தீர்மானிக்க முடியாது.

கிருஷ்ண தேவராயன் நாட்டின் மீது எதிரிகளின் படை திரண்டு வந்தது. எதிரிகள் தங்கள் கடவுளின் பெருமையை நிலைநாட்டப் போரிடுவதாக நம்பினர். அதனால், தங்கள் உயிரைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

கிருஷ்ண தேவராயருக்குத் தெனாலிராமன் ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார்.

'அரசே... எதிரிகளின் சமூகத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. பன்றி ரத்தத்தைத் தீண்டிவிட்டால், அதைச் சுத்தம் செய்து நீக்கும் வரை, கடவுளின் பெயரை உச்சரிக்க மாட்டார்கள். அதை நமக்குச் சாதகமாக்கிக் கொள்வோம்' என்றார்.

தெனாலிராமன் ஆலோசனைப்படி, பன்றிகளின் குருதி பெரும் பாத்திரங்களில் நிரப்பப்பட்டது. யானைகள் மீது, போர்க்களத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எதிரிகளின் மீது வீசப்பட்டது. அப்போது கடவுளின் பெயரை உச்சரிக்க முடியாமல் திகைத்து நின்றதால், எதிரிகளால் தாக்கப்பட்டனர். வீழ்த்தப்பட்டனர். அங்கு மூடநம்பிக்கையை புத்திசாலித்தனம் வெற்றி கொண்டது.

கவனமோ, விழிப்புணர்வோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு வேண்டுமானால், கிரகங்கள் தீர்மானித்தபடி வாழ்க்கை நடக்கலாம். கொஞ்சம் விழிப்புணர்வோடு வாழ்க்கையை அணுகுபவர்கள் தங்கள் வாழ்க்கையின் திசையைத் தாங்களேதான் தீர்மானித்துக் கொள்ள விரும்புவார்கள்.

அதற்காக கிரகங்களுக்கு நம் மீது ஆதிக்கமே இருக்காதா? இருக்கும். ஆனால் ஜோசியத்தில் மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு அல்ல. நீங்கள் உறுதியாக இருந்தால் எந்தக் கிரகம், எந்தத் திசையில் இடம் பெயர்ந்தால் என்ன? உங்கள் உடலின் மீது உங்களுக்கு முழுமையான ஆளுமை இருந்தால், உங்கள் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனத்தை ஆளத் தெரிந்துவிட்டால், ஐம்பதிலிருந்து அறுபது சதவிகிதம் வரை விதி உங்கள் சொல்படி கேட்கும். உங்கள் உயிர்சக்தியை முழுமையாக ஆளக் கற்றுக் கொண்டு விட்டீர்கள் என்றால், பிறப்பு, மரணம் எல்லாவற்றையும் நீங்கள் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ள முடியும்.

ஆரூடம் என்பது வானிலை அறிக்கை போன்றது. எல்லா சமயங்களிலும் கணிப்பு சரியாக இருப்பதில்லை. மழை பெய்யும் என்று அது சொல்லட்டும். ஆனால் நான் நனைவேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நனைவதா வேண்டாமா என்பது என் கையில்தானே இருக்கிறது?






      Dinamalar
      Follow us