
எத்தனை நாளைக்கு பொறுமை?
'தொடர் தோல்விகளால் துவண்டு விட்டார் போலிருக்கிறது...' என, மஹாராஷ்டிராநவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.இங்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணிஆட்சி நடக்கிறது. சிவசேனா கட்சியை நிறுவியவரான, மறைந்த பால் தாக்கரேயின் சகோதரர் மகன் தான், ராஜ் தாக்கரே. ஆவேசமாக பேசக்கூடியராஜ் தாக்கரே, சிவசேனா கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர். ஆனால், ராஜ் தாக்கரேயின் வளர்ச்சி, தன் மகன் உத்தவ்
தாக்கரேயின் அரசியல் எதிர்காலத்துக்கு தடையாக இருக்கும் என கருதி, அவரை ஓரம் கட்டினார், பால் தாக்கரே. இதையடுத்து, சிவசேனாவில் இருந்து வெளியேறிய ராஜ் தாக்கரே, நவநிர்மாண் சேனா என்ற புதிய கட்சியை துவக்கினார். ஆனால், இதுவரை நடந்த எந்த தேர்தலிலும் அவரது கட்சி சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி பெறவில்லை.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதற்கு பின் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தார். சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தார். இதில் எந்த தேர்தலிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து, விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 'பாவம்; அவரும் எத்தனை நாளைக்குத் தான் பொறுமையாக இருப்பார்...' என்கின்றனர்,
மஹாராஷ்டிரா அரசியல்வாதிகள்.

