PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM

'அவர்கள் செய்யாத விளம்பரத்தையா, நாங்கள் செய்து விட்டோம்...' என, ஆவேசப்படுகிறார், உத்தரகண்ட் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான புஷ்கர் சிங் தாமி.
இவர், உத்தரகண்ட் முதல்வராக பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகளாகி விட்டன. வரும், 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும், தன்னை முதல்வர் வேட்பாளராக, பா.ஜ., மேலிடம் அறிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.
இதற்காக, மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்; இது, எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
'உத்தரகண்டில், வேலைவாய்ப்பின்றி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். உருப்படியாக எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
'ஆனால், புஷ்கர் சிங் தாமியின் விளம்பரத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் விளம்பரத்துக்காக மட்டும், மக்கள் வரிப்பணம், 1,000 கோடி ரூபாயை செலவிட்டுள்ளார்...' என, ஆவேசப்படுகின்றனர்.
பா.ஜ.,வினரோ, 'காங்கிரஸ் எம்.பி., ராகுல், டிராக்டர் ஓட்டுவது, வயலில் இறங்கி வேடிக்கை காட்டுவது, கட்டுமான தொழிலாளர்களுடன், 'போஸ்' கொடுப்பது என, விதவிதமாக விளம்பரம் செய்யவில்லையா... எங்களை குறை சொல்லும், காங்., கட்சியினர், இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்...?' என, பதிலடி கொடுக்கின்றனர்.

