
ஆட்டம் ஆரம்பம்!
'என்ன இருந்தாலும், ஒரு முன்னாள் முதல்வரை இவ்வளவு அவமதிக்கக் கூடாது...' என, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி பரிதாபத்துடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
ஆந்திர சட்டசபையில் மொத்தம் உள்ள, 175 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி, 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், ஜெகன்மோகனும் அடக்கம்.
விதிகளின்படி, மொத்த தொகுதிகளில் குறைந்தது, 10 சதவீதமாவது வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியும். அதே நேரம், ஆளுங்கட்சி மனது வைத்தால், குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்கலாம்.
ஆனால், தற்போது இந்த பதவியை ஜெகன்மோகனுக்கு கொடுக்க, சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் கடுப்பான ஜெகன், 'இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வேன்...' என, தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியினரோ, 'அவர், முதல்வராக இருக்கும்போது எங்களை எவ்வளவு அவமதித்தார். எங்கள் ஆட்டம் இப்போது தான் ஆரம்பம்; பொறுத்திருந்து பாருங்கள்...' என்கின்றனர்.