PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM

'கூட்டணி பேசுவதற்கான நடைமுறையா இது...' என, விரக்தியுடன் கூறுகின்றனர், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளும்,
தொண்டர்களும். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தன; இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
தொகுதி ஒதுக்கீட்டில் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததால், லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதனால், இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான், சமீபத்தில் பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியில் வரும்போது, எதிர்திசையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வந்தார்.
அப்போது இருவரும் ஐந்து நிமிடங்கள் பேசினர். பின், கை குலுக்கி விடை பெற்றனர். இதை பார்த்த சக எம்.பி.,க்கள், 'கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வதற்காக இருவரும் மனம் விட்டுப் பேசினர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்...' என்றனர்.
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினரோ, 'பார்லிமென்ட் வளாகத்தில் ஐந்து நிமிடங்கள் பேசினால் தேர்தலில் வெற்றி கிடைத்து விடுமா... மணிக்கணக்கில் பேச வேண்டிய விஷயத்தை, ஏதோ குசலம்
விசாரிப்பது போல் பேசி சரிசெய்து விட முடியுமா?'இப்படி இருந்தால் எப்படி பா.ஜ.,வை வீழ்த்துவது; ரொம்ப கஷ்டம்தான்...' என, புலம்புகின்றனர்.

