PUBLISHED ON : பிப் 25, 2025 12:00 AM

'ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சும்மா சொல்லக்கூடாது. அரசியல் எதிரியையே, தன் பேச்சால் வசியப்படுத்தி விட்டாரே...' என, ஆச்சரியப்படுகின்றனர், கர்நாடக மக்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் மாநிலத் தலைவரான சிவகுமார், துணை முதல்வராக உள்ளார். இங்கு, பா.ஜ., தான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
சித்தராமையாவை விட, சிவகுமாரைத் தான், பா.ஜ.,வினர் கடுமையாக எதிர்க்கின்றனர். பா.ஜ.,வை எதிர்க்கும் அளவுக்கு பண பலம் இவரிடம் உள்ளது.
சிவகுமாரும், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங்கும், சமீபத்தில் பெங்களூரில் நடந்த ராணுவ விமான கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருப்பர் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், நடந்ததே வேறு.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளா குறித்து இருவரும் மணிக்கணக்காக பேசினர். தன் சொந்த மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவின் அருமை, பெருமைகளை சிவகுமாரிடம் நீண்ட நேரம் விளக்கி கூறினார், ராஜ்நாத் சிங்.
இந்த நிகழ்வு நடந்த அடுத்த சில நாட்களிலேயே கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடினார் சிவகுமார். இதை பார்த்த கர்நாடக மக்கள், 'ராஜ்நாத் சிங் கில்லாடியான அரசியல்வாதி தான்...' என, பாராட்டினர்.