PUBLISHED ON : ஆக 02, 2025 12:00 AM

'ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனரே... இதை எப்படி நம் தலைவர் சமாளிக்கப் போகிறார்...' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி நிர்வாகிகள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவுக்கு, உடல்நிலை பாதிப்பு காரணமாக முன்பு போல் அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிய வில்லை.
எதிர்க்கட்சிகளை சமாளிக் கும் விஷயத்தில், அவரிடம் ஒருவித தயக்கமும், விரக்தியும் இருப் பதாக, அவரது கட்சியினரிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது.
தெலுங்கானா பா.ஜ., - எம்.பி., ரமேஷ், சமீபத்தில் சந்திரசேகர ராவ் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார். அதில், 'டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
'அப்போது டில்லியில் உள்ள என் வீட்டுக்கு வந்த ராவ், இந்த ஊழல் வழக்கிலிருந்து, தன் மகளை விடுவித்தால், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை, பா.ஜ.,வுடன் இணைக்க தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்தார்; இதை அவரால் மறுக்க முடியுமா...' என, கூறியிருந்தார்.
ரமேஷின் இந்த குற்றச்சாட்டு, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'இதெல்லாம் உண்மையாக இருக்குமோ; நாம் தான் ஏமாளிகளா...' என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளனர், அக்கட்சியினர்.