PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM

'எவ்வளவு சொன்னாலும் திருத்த முடியாது போலிருக்கிறது...' என, காங்கிரசின் முன்னணி தலைவர்களை பார்த்து கடுப்படிக்கின்றனர், ஹிமாச்சலில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள்.
ஹிமாச்சல் பிரதேசத்தில், முதல்வர் சுக்வீந்தர் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த ராஜ்யசபா தேர்தலில், காங்கிரசை ஆதரித்த மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள், கடைசி நேரத்தில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
மேலும், ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் கட்சி மாறி, பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்தனர். இதனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அபிஷேக் சிங்வி தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, சுக்வீந்தர் சுகு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. கட்சி மாறி ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்களை உடனடி யாக தகுதி நீக்கம் செய்ததால், ஆட்சி தப்பியது.
இந்நிலையில், சமீபத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஒரு தொகுதியில் முதல்வர் சுக்வீந்தர் சுகுவின் மனைவி கம்லேஷ் தாக்குர் வெற்றி பெற்றார்.
இந்த விவகாரம், ஹிமாச்சலில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 'ஏற்கனவே நம் கட்சியை, வாரிசு அரசியல் கட்சி என பலரும் கிண்டலடிக்கின்றனர். இந்த லட்சணத்தில், சுக்வீந்தர் தன் மனைவியை வேட்பாளராக நிறுத்தியது ஏன்?
'இப்படியிருந்தால், கட்சியில் உள்ளவர்கள், மற்ற கட்சிகளுக்கு ஓடத் தானே செய்வர். இதை யாரிடம் சொல்வது...' என, புலம்புகின்றனர்.