PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

'எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என தெரியவில்லை...' என்று கவலைப்படுகிறார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்.
உ.பி.,யில் உள்ள கோரக்பூர் மடத்தின் தலைவரான யோகி ஆதித்யநாத், அந்த தொகுதி எம்.பி.,யாக தொடர்ச்சியாக பதவி வகித்து வந்தார். இங்கு, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றதும், யாரும் எதிர்பாராத வகையில், யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது பா.ஜ., மேலிடம். பல தரப்பிலும் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அவற்றை சமாளித்து திறமையாக ஆட்சி நடத்தினார், ஆதித்யநாத்.
பின், 2022ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெற்றது. இந்த முறையும் ஆதித்யநாத்தே முதல்வர் பதவியில் அமர்ந்தார்; மேலும், அவரது செல்வாக்கு தேசிய அளவிலும் உயர்ந்தது.
ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் பா.ஜ., பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, ஆதித்யநாத்துக்கு எதிராக கட்சிக்குள் கலக குரல்கள் ஒலிக்கத் துவங்கின.
'கட்சியை விட செல்வாக்கு மிக்க நபர்கள் யாரும் இல்லை. எந்த தனிப்பட்ட நபரும், கட்சிக்கு அடுத்தபடியாகத் தான் இருக்க வேண்டும்...' என, மறைமுகமாக யோகியை போட்டு தாக்கினார், துணை முதல்வரான கேசவ் பிரசாத் மவுரியா.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆதித்யநாத்,'இத்தனை நாட்களாக கூடவே இருந்துவிட்டு, இப்படி வெறுப்பை விதைக்கிறாரே...' என, கவலைப்படுகிறார்.