PUBLISHED ON : ஜன 21, 2026 04:13 AM

சேலம் மாவட்டம், மல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், கடந்த 8ம் தேதி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிவலிங்கம், பயனாளிகளுக்கு, 3,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை வழங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், 'இந்த மாதம் பொங்கல் பரிசு, 3,000 ரூபாய்; மகளிர் உரிமை தொகை, 1,000; கல்லுாரியில் படிக்கும் மகள் அல்லது மகன் ஆகியோருக்கு, 1,000 ரூபாய் என, 5,000 ரூபாயை அரசு வழங்கி இருக்கிறது. எங்களுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்' என்றார்.
கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர், 'போன வருஷம் பொங்கலுக்கு பணம் கொடுக்காம ஏமாத்துனீங்களே; அந்த கணக்கு என்னாச்சு தலைவரே?' என முணுமுணுக்கவே, அருகில் அமர்ந்திருந்த பெண் ஆமோதித்தார்.

