PUBLISHED ON : ஏப் 07, 2024 12:00 AM

'கடைசியில் இப்படி ஆகி விட்டதே...' என, ஒடிசாவைச் சேர்ந்த ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியினரும், பா.ஜ.,வினரும் வருத்தப்படுகின்றனர்.
இங்கு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. ஒடிசாவில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிர்க்கட்சிகளே இல்லை என கூறும் அளவுக்கு, இங்கு தொடர்ச்சியாக பிஜு ஜனதா தளம் தான் ஆளுங்கட்சியாக உள்ளது.
தற்போது லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டார், நவீன் பட்நாயக்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் துவங்கிய பின்னும், பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியது. கடைசியில், இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன.
தங்களுக்கு பிஜு ஜனதா தளம் சார்பில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போதுமானதாக இல்லை என்பது பா.ஜ., தலைவர்களின் குற்றச்சாட்டு.
'சில ஆண்டுகளுக்கு முன், பா.ஜ.,வுக்கு ஒடிசாவில் செல்வாக்கு குறைவாக இருந்தது என்பது உண்மை தான். இப்போது நிலைமை மாறி விட்டது. தேசிய கட்சியான எங்களுக்கு, உதிரி கட்சிகள் போல் தொகுதிகள் ஒதுக்குவதை எப்படி ஏற்க முடியும். தனியாக போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்கிறோம்...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.
இங்குள்ள காங்., கட்சியினரோ, 'ஊரு இரண்டுபட்டு விட்டது. இனி கூத்தாடியான எங்களுக்கு கொண்டாட்டம் தான்...' என்கின்றனர்.

