PUBLISHED ON : மே 23, 2024 12:00 AM

'அதிர்ஷ்ட காற்று, இவர் பக்கம் வீசுது போலிருக்கிறதே...' என ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா பற்றி பேசுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மூன்று சுயேச்சை உறுப்பினர்கள், சமீபத்தில் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து, பா.ஜ., அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
லோக்சபா தேர்தல் முடிந்ததும், இந்த பிரச்னை பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூபிந்தர் சிங் ஹூடாவின் வீடு, டில்லியில் தான் உள்ளது. அதிகாலையில், தன் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில், அவர் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக அவரை பூங்காவில் காண முடியவில்லை. விசாரித்தபோது, அவர் ஹரியானாவில் முகாமிட்டுள்ளது தெரியவந்தது.
'எப்படியும் ஹரியானாவில் பா.ஜ., ஆட்சி கவிழ்ந்து விடும். அதனால், முதல்வராக பதவியேற்க தயாராக இருக்கும்படி, காங்., மேலிடம் ஹூடாவுக்கு உத்தரவிட்டுள்ளது' என்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
'பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு மீண்டும் முதல்வராகும் யோகம் இருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்...' என, பெருமை பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

