PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

'எடுத்ததுக்கெல்லாம் விதிமுறை, செலவு என, இந்த தேர்தல் அதிகாரிகள் படுத்தி எடுக்கின்றனர்...' என புலம்புகிறார், கேரள மாநில காங்கிரஸ் எம்.பி., ரம்யா ஹரிதாஸ்.
இவர், கடந்த லோக்சபா தேர்தலில், பாலக்காடு மாவட்டம், ஆலாத்துார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலிலும் அதே தொகுதியில், காங்., வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.
சமீபத்தில், தன் தொகுதிக்கு உட்பட்ட ஒரு இடத்துக்கு பிரசாரத்துக்கு சென்றிருந்தார், ரம்யா. அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்ட ஒரு ஹோட்டலை திறந்து வைக்கும்படி, அதன் உரிமையாளர், ரம்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், தேர்தல் கமிஷனின் கடுமையான விதிமுறைகளை காரணம் காட்டி, 'இது ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. நீங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஹோட்டலை திறந்து வைத்ததாக கூறி, செலவு கணக்கில் சேர்த்து விடுவர்...' என, அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் காதை கடித்தனர்.
இதையடுத்து, ஒரு நிமிடம் யோசித்த ரம்யா, 'திறந்து வைத்தால் தானே செலவு கணக்கில் சேர்ப்பர். சாப்பிட்டால் சேர்க்க மாட்டார்களே...' எனக் கூறி, ஒரு மசால் தோசை ஆர்டர் செய்து, அதற்கு பில் கொடுத்ததுடன், அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டார்.
'ஒரு தோசை சாப்பிடுவதற்கு கூட, வீடியோ ஆதாரம் காட்டும் அளவுக்கு தேர்தல் கமிஷன் ரொம்ப கெடுபிடியாக இருக்கிறது...' என புலம்பியபடியே, நடையை கட்டினார் ரம்யா.

