PUBLISHED ON : மே 29, 2024 12:00 AM

'தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இவருக்கு இல்லை போலிருக்கிறதே...' என, பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவருமான பகவந்த் சிங் மான் பற்றி கவலைப்படுகின்றனர், அந்த கட்சி நிர்வாகிகள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் நடந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதும், பகவந்த் சிங் மானை முதல்வர் பதவியில் அமர்த்தினார், கெஜ்ரிவால்.
இவருக்கு பெரிய அரசியல் அனுபவம் இல்லை. மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் வாயிலாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இதனால் இவரை கட்சியில் சேர்த்த கெஜ்ரிவால், முதல்வர் பதவியையும்அவருக்கு கொடுத்தார்.
பஞ்சாபில், 13 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ், அகாலி தளம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால், குறைந்தது எட்டு தொகுதிகளிலாவது ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் தான், கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க முடியும் என கருதுகின்றனர், பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர்.
தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய பகவந்த் சிங் மானோ, சிறையில் இருந்து ஜாமினில் வெளியில் வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து டில்லியை சுற்றி சுற்றி வருகிறார்.
இதனால் கவலை அடைந்துள்ள பஞ்சாபில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள், 'ஆளுங்கட்சியாக இருந்து தேர்தலில் தோற்றால் பெரிய அவமானம்; இது, முதல்வருக்கு புரிகிறதா, இல்லையா என தெரியவில்லை...' என புலம்புகின்றனர்.