/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆளுங்கட்சி வலையில் சிக்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
/
ஆளுங்கட்சி வலையில் சிக்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ஆளுங்கட்சி வலையில் சிக்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ஆளுங்கட்சி வலையில் சிக்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
PUBLISHED ON : டிச 05, 2025 03:09 AM

பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''ஆளுங்கட்சி கான்ட்ராக்டர்களுக்கே தண்ணி காட்டறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கடந்த 2023 டிசம்பர்ல நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்கள்ல கனமழை பெய்ஞ்சதோல்லியோ... துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல்ல, 15க்கும் மேற்பட்ட இடங்கள்ல தாமிரபரணி ஆற்றின் கரையில உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள்ள தண்ணீர் புகுந்துடுத்து ஓய்...
''உடைப்பு ஏற்பட்ட இடங்களில், தற்காலிகமாக மண் கொட்டி அடைக்கற பணிகளை, ஆளுங்கட்சி கான்ட்ராக்டர்கள் உட்பட, 15 பேரிடம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஒப்படைச்சா... அவாளும் லாரி லாரியா மண்ணை அள்ளிண்டு வந்து, கரைகளை அடைச்சா ஓய்...
''இந்த பணியை முடிச்சு, ரெண்டு வருஷம் ஆகியும், பில் தொகையில், 16 சதவீதத்தை மட்டுமே நீர்வளத்துறை அதிகாரிகள் குடுத்திருக்கா... மிச்ச பணத்தை தராம, கான்ட்ராக்டர்களை அலைக் கழிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கள்ள புத்தகம் அச்சடிக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனரா குமரகுருபரன் இருந்தப்ப, ஒரு பதிப்பகத்தை துவக்கினாரு... இதுல பணிபுரிய, 22 அறிஞர்களையும் நியமிச்சாரு வே...
''அவங்களும் மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, சமயபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட, 16 ஊர்கள்ல இருக்கிற பழமையான கோவில்கள் பற்றிய தகவல்களை தொகுத்து, 'ஆன்லைன்' புத்தகமாக்கி குடுத்தாவ... ஆனா, ஒரு வருஷமாகியும் பேப்பர் புத்தகம் இன்னும் வெளியாகல...
''அதே நேரம், பதிப்பகம் சார்புல பழைய ஆன்மிக புத்தகங்களை தேடிப் பிடிச்சு, அதில் உள்ள கருத்துகளை அப்படியே உருவி, அட்டையையும், ஆசிரியர் பெயரையும் மட்டும் மாத்தி, புது புத்தகங்கள் அச்சடிச்சதா கணக்கு காட்டி, பல லட்சம் ரூபாயை சுருட்டுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வலையில சிக்கிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''யார் வலையில, யார் சிக்கிட்டாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டத்துல இருக்கிற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருத்தர், மாவட்ட செயலராகவும் இருக்கார்... இவரது தொகுதியில், நாயுடு சமுதாயத்தினர் ஓட்டுகள் அதிகம் இருக்குது பா...
''சமீபத்துல, கோவையில் ஜி.டி.நாயுடு பெயரில், பிரம்மாண்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்சாரே... இதனால, கொங்கு மண்டலத்துல இருக்கிற அந்த சமுதாயத்தினரின் ஓட்டுகள், ஆளுங்கட்சிக்கு விழும்னு பலரும் சொல்றாங்க பா...
''இதனால, நாயுடு சமுதாயத்தினர் ஓட்டுகள் தனக்கு விழாம, தி.மு.க.,வுக்கு போயிடும்னு அந்த எம்.எல்.ஏ., பயப்படுறாரு... அதுவும் இல்லாம, கொங்கு மண்டலத்தின் தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஒருத்தருக்கும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கும் நல்ல நட்பு இருக்குது பா...
''அந்த மாஜி, 'ஆளுங்கட்சிக்கு வந்தா, அதே தொகுதியில் வேட்பாளர் மற்றும் மாவட்ட செயலர் பதவி வாங்கி தர்றேன்'னு வீசிய துாண்டில்ல எம்.எல்.ஏ., விழுந்துட்டாரு... சீக்கிரமே எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா பண்ணிட்டு, அறிவாலயத்தில் ஐக்கியம் ஆக போறாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''வாரும் ராதாகிருஷ்ணன்... போன வாரம் உடுமலை போனவர் இப்ப தான் வர்றீரா... அங்க செந்திலை பார்த்தீரா ஓய்...'' என, நண்பரை வரவேற்று குப்பண்ணா பேச, மற்றவர்கள் கிளம்பினர்.

