PUBLISHED ON : ஏப் 19, 2024 12:00 AM

'ஆரம்பத்திலேயே இப்படி பேசினால் எப்படி...' என எரிச்சலுடன் கூறுகின்றனர், மஹாராஷ்டிரா மாநில பா.ஜ.,வினர்.
இங்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தல் களம் களைகட்டியுள்ள நிலையில், அமராவதி தொகுதியில் மட்டும் அனல் கொஞ்சம் அதிகமாக அடிக்கிறது.
இதற்கு காரணம், இந்த தொகுதியின் எம்.பி.,யும், தற்போதைய பா.ஜ., வேட்பாளருமான நவ்நீத் ராணா. இவர், பிரபல நடிகையும் கூட. தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் அமராவதி தொகுதியில் இவர் சுயேச்சையாக போட்டியிட்டார். சரத்பவாரின் தேசியவாத காங்., இவரை ஆதரித்தது. இதனால், வெற்றி பெற்றார்.
தற்போதைய தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்த நவ்நீத் ராணா, தற்போது அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், 'கடந்த தேர்தலில் மோடி அலை வீசியது. இந்த தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை...' என்றார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த எதிர்க்கட்சியினர், 'மோடி அலை இல்லை என, பா.ஜ., வேட்பாளரே கூறி விட்டார்...' என, கிண்டலடிக்கின்றனர். கலக்கம் அடைந்த நவ்நீத், 'நான் பேசியதை திரித்து வெளியிட்டு விட்டனர்...' என, விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.
'தேர்தல் முடியும் வரை, வாயை திறக்காமல் அமைதியாக பிரசாரம் செய்யுங்க மேடம்...' என, அவருக்கு கட்சி நிர்வாகிகள் கட்டளையிட்டுள்ளனர்.

