PUBLISHED ON : மார் 29, 2024 12:00 AM

'மறுபடியும் தப்பு கணக்கு போட்டு விட்டாரோ...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலைப் பற்றி கவலைப்படுகின்றனர், கேரளாவில் உள்ள அந்த கட்சியின் நிர்வாகிகள்.
இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, தன் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான உ.பி., மாநிலம், அமேதியில் போட்டியிட்டார், ராகுல்.
அவரை எதிர்த்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் இறங்கினார். இதனால், பாதுகாப்புக்காக கேரள மாநிலம், வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டார்.எதிர்பார்த்தது போலவே, அமேதியில் தோல்வி அடைந்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.
இந்த முறையும் வயநாட்டில் களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து, இடதுசாரி கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். மற்ற மாநிலங்களில், காங்., தலைமையிலான, 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சி, கேரளாவில் காங்கிரசை எதிர்க்கிறது.
ஆளுங்கட்சி சார்பில், தன்னை எதிர்த்து பலமான வேட்பாளர் களம் இறக்கப்பட்டதால், கவலையில் இருந்தார், ராகுல். இப்போது, பா.ஜ., சார்பில், அந்த கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.
'ஏற்கனவே மூச்சு திணறுகிறது. இப்போது மும்முனை போட்டியில் இறங்க வேண்டியதாயிருக்கிறதே. கைக்கு எட்டும் துாரத்தில் இருந்த வெற்றி, கை நழுவி விடுமோ...' என, கலக்கத்தில் உள்ளனர் காங்கிரசார்.

