PUBLISHED ON : ஏப் 28, 2024 12:00 AM

'இது என்ன வம்பாக இருக்கு...' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து எரிச்சலுடன் கூறுகின்றனர், திஹார் சிறை அதிகாரிகள்.
டில்லியில் நடந்த மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார், அரவிந்த் கெஜ்ரிவால்.
கடந்த ஒரு மாதமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், எப்போது சிறைக்குள் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதிலிருந்தே, சிறை அதிகாரிகளின் துாக்கம் தொலைந்து விட்டது.
'கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி. அவருக்கு சிறையில் உரிய சிகிச்சை தரப்படவில்லை. இன்சுலின் மருந்து தரப்படவில்லை. சரியான உணவு தரப்படவில்லை...' என, தினந்தோறும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளனர்.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கியே, நொந்து நுாலாகி விட்டனர், சிறை அதிகாரிகள்.
இப்போது புதிதாக, 'கெஜ்ரிவாலின் ஒவ்வொரு நடவடிக்கையையும், கண்காணிப்பு கேமரா வாயிலாக, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவரது தனிப்பட்ட விஷயங்களில் சிறை அதிகாரிகள் தலையிடுகின்றனர்...' என, புதிதாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்துள்ள சிறை அதிகாரிகள், 'தயவு செய்து, இவரை வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள சிறையில் அடையுங்கள். எங்களை நிம்மதியாக பணி செய்ய விடுங்கள்...' என, புலம்புகின்றனர்.

