PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

'பாரம்பரியமாக நம் கட்சியில் இருந்து வந்தவர்களிடம் கூட, இவர் அளவுக்கு விஸ்வாசம் இருக்குமா என்பது சந்தேகம் தான்...' என, அசாம் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா குறித்து ஆச்சரியப்படுகின்றனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள்.
ஹிமந்த பிஸ்வ சர்மா காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர். அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோயின் வலது கரமாகவும், அவரது தலைமையிலான அரசில் மூன்று முறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
சில ஆண்டுகளுக்கு முன் தான், பா.ஜ.,வில் இணைந்தார். அசாமில்,முந்தைய சர்பானந்த சோனாவால் அரசிலும் அமைச்சராக இருந்தார்.கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றதும், சோனாவாலுக்கு பதிலாக ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வரானார்.
அதன்பின், இவரது ஆட்டம் ஆரம்பமானது. வடகிழக்கு மாநிலங்களில், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை பா.ஜ.,வுக்கு இழுத்து வருவதிலும், அங்கு பா.ஜ., ஆட்சியை அமைப்பதிலும், சுறுசுறுப்பாக செயல்பட்டார்.
பா.ஜ.,வில் மத்திய அமைச்சர்கள், செய்தி தொடர்பாளர்கள் என பலர் இருந்தாலும், எந்த ஒரு பிரச்னையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பதிலும், அவர்களை ஆவேசமாக தாக்குவதிலும் ஹிமந்த பிஸ்வ சர்மா தான், முன்னணி வகிக்கிறார்.
இதைப் பார்த்த சக பா.ஜ., தலைவர்கள், 'இவர், வேறு ஏதோ ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது...' என, முணுமுணுக்கின்றனர்.

