PUBLISHED ON : ஏப் 21, 2024 12:00 AM

'இந்த முறை அலட்சியமாக இருந்து விடக் கூடாது...' என, தன் கட்சியினரிடம் அடிக்கடி கூறி வருகிறார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்.
பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தேஜஸ்வி யாதவ் பங்கேற்ற கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் கூடியது. பீஹாரில் இதுவரை எந்த தலைவருக்கும் கூடாத கூட்டம் கூடியதால், பலரும் ஆச்சரியப்பட்டனர்.
இதனால், எப்படியும் அந்த தேர்தலில் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் தேஜஸ்வி. ஆனால், தேர்தல் முடிவு, அவருக்கு ஏமாற்றத்தையே அளித்தது. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, தங்கள் கட்சியை விட குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்ற நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த தேஜஸ்விக்கு, துணை முதல்வர் பதவியே கிடைத்தது.
இப்போது பா.ஜ.,வுடன் நிதீஷ் குமார் கைகோர்த்துள்ளதால், தேஜஸ்வியின் துணை முதல்வர் பதவியும் பறிபோய் விட்டது.
தற்போது நடக்கும் லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும், தேஜஸ்விக்கு கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுகிறது. 'தலைவரே, இனி மத்தியில் நாம் கை காட்டும் கட்சி தான் ஆளுங்கட்சி...' என, அவரது கட்சியினர் உசுப்பேற்றுகின்றனர்.
தேஜஸ்வியோ, 'கூட்டத்தை பார்த்து இனி ஏமாற மாட்டேன். தேர்தல் முடிவுகள் வரட்டும் பார்க்கலாம்...' என, அடக்கி வாசிக்கிறார்.

