PUBLISHED ON : ஏப் 29, 2024 12:00 AM

'என்ன தான் பொய்யாக இருந்தாலும், ஒரு நியாயம் வேண்டாமா...' என, ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
இம்மாநிலத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும், அடுத்த மாதம், 13ல் நடக்கவுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால், ஐந்தாண்டுகளாக மிகப் பெரிய சோதனைகளை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு. இதனால், தற்போதைய தேர்தலில் தோல்வி அடைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். இதற்காகவே, பழைய பகையை மறந்து, பா.ஜ.,வுடன் கைகோர்த்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின், 'ஜனசேனா' கட்சியுடனும் கூட்டணி அமைத்துள்ளார்.
ஆனாலும், ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பை, 1 சதவீதம் கூட நழுவ விடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ள சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.
'ஆந்திராவில் நாங்கள் ஆட்சி அமைத்தால், ஏழை பெண்களுக்கு, 800 சதுர அடியில் இலவசமாக வீடு கட்டித் தரப்படும்' என்ற அறிவிப்பு தான், அது.
இதை கேட்டு ஆந்திராவில் உள்ள ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் கிறுகிறுத்து போயுள்ளனர். 'பதவி ஆசை ஒரு மனிதரை எப்படி ஆட்டி படைக்கிறது பாருங்கள்...' என்கின்றனர், அவர்கள்.

