PUBLISHED ON : ஜூன் 30, 2024 12:00 AM

'ஒட்டுமொத்த தோல்விக்கும், தனி நபர் எப்படி பொறுப்பேற்க முடியும்...' என கொதிக்கிறார், மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இதற்கு முந்தைய தேர்தலில், மொத்தம் உள்ள 42 தொகுதிகளில், 18ல் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆளும் திரிணமுல், 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், பா.ஜ., அதற்கு கடும் போட்டியை கொடுத்தது.
இதனால், சமீபத்திய தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறலாம் என, பா.ஜ., தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மீதமுள்ளவற்றில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி மீது, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த பா.ஜ., தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். அதிலும், கட்சியின் முன்னாள் மாநில தலைவரான திலீப் கோஷ், முன்னாள் எம்.பி., லாக்கெட் சட்டர்ஜி உள்ளிட்டோர், பகிரங்கமாகவே சுவேந்து மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெறுத்துப் போயுள்ள சுவேந்து அதிகாரி, 'மாநில தலைவர், மூத்த தலைவர்கள் என பலரும் இருக்கும்போது, கட்சியின் தோல்விக்கு என்னை மட்டும் பொறுப்பேற்க வைப்பது நியாயமா...' என, புலம்புகிறார்.