PUBLISHED ON : ஜன 08, 2026 03:32 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: த.வெ.க.,வில் இணைபவர் களுக்கு, மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு உள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். தமிழகத்தில், அ.தி.மு.க.,வை விட பெரிய கட்சி எதுவுமில்லை. த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. சட்டசபை தேர்தலில், முதல் இடத்தை அ.தி.மு.க., கூட்டணி தான் பிடிக்கும். இரண்டாம் இடத்திற்கு தான், தி.மு.க., --- த.வெ.க., இடையே போட்டி உள்ளது.
டவுட் தனபாலு: சமீபத்தில், ஒரு தனியார் கல்லுாரி நடத்திய கருத்து கணிப்பில், முதல்வர் வேட்பாளர்களில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியா, ரெண்டாவது இடத்தில் விஜயும், மூன்றாவது இடத்தில் உங்க தலைவர் பழனிசாமியும் இருந்தாங்களே... அதன்பிறகும் நாங்க தான் முதலிடம்னு எப்படி சொல்றீங்க என்ற, 'டவுட்' வருதே!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: பொங்கலுக்கு, 3,000 ரூபாய் கொடுத்தால், மக்கள் ஓட்டு போடுவர் என தி.மு.க., நம்புகிறது. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, ஒரு ரேஷன் கார்டு மீது, 2 லட்சத்து 4,000 ரூபாய் கடன் இருந்தது; தற்போது, 4 லட்சத்து 54,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கடனை, முதல்வர் ஸ்டாலின் கட்டப் போவது கிடையாது. நம் குழந்தைகள் தான் கட்ட வேண்டும். ஆட்சிக்கு வந்து, 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்றுள்ளனர்.
டவுட் தனபாலு: 'தகப்பன் வாங்குற கடன் பிள்ளைகள் தலையில் விடியும்'னு கிராமங்கள்ல சொல்வாங்க... அந்த வகையில், தமிழக மாணவர்கள் எல்லாம், 'அப்பா' என, அன்புடன் தன்னை அழைப்பதாக சொல்ற முதல்வர் ஸ்டாலின் வாங்குற கடன்கள், நாளைக்கு அந்த மாணவர்கள் தலையில் தான், வரிகளா வந்து விடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார்: வரும் சட்டசபை தேர்தலுக்காக, கடுமையாக உழைத்து, பூத் கமிட்டிகள் அளவில், தமிழக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, அதிகமான தொகுதிகளை தி.மு.க., விடம் கேட்டு வாங்க முடியும்.
டவுட் தனபாலு: சரியா போச்சு... எல்லா கட்சிகளும், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே பூத் கமிட்டிகளை பலப் படுத்தி, தேர்தல் களத்தில் இறக்கி விட்டுட்டாங்க... நீங்க, இனிமே பூத் கமிட்டிகளை பலப்படுத்தி முடிக்கிறதுக்குள்ள, 2029 லோக்சபா தேர்தலே வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

