PUBLISHED ON : ஜன 07, 2026 03:10 AM

பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இணைந்தே தேர்தலை சந்தித்தோம். ஆனால், 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுகளை கணக்கிட்டால், தமிழகத்தில், 26 லோக்சபா தொகுதிகளில் வென்று இருப்போம்.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தாலும், உங்க ரெண்டு கட்சிகளும் இணைந்து, 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டும், தமிழகத்தில் ஏன் ஆட்சிக்கு வர முடியலை... தமிழக மக்கள், சட்டசபை தேர்தலுக்கும், லோக்சபா தேர்தலுக்கும் தனித்தனியா சிந்திச்சு தான் ஓட்டு போடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயிரம் முறை தமிழகம் வந்தாலும், தமிழக மண், பா.ஜ.,வை ஏற்கப் போவதில்லை. தமிழக மக்கள், பா.ஜ.,வுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள், தமிழகம் வருவதற்கான இடங்களும், தேதிகளும் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும்.
டவுட் தனபாலு: உங்க தலைவர் ராகுல், பீஹார் பிரசாரத்தில் ஆரம்பத்தில் தலையை காட்டிட்டு காணாம போயிட்டார்னு ஏற்கனவே புகார்கள் இருக்கு... அதனால, தமிழகத்துல அவரது பிரசார பயணத்தை தெளிவா திட்டமிடுங்க... ஒருவேளை, தேர்தல்ல உங்க கூட்டணி தோற்று போயிட்டா, 'ராகுல் தான் சொதப்பிட்டார்'னு தி.மு.க.,வினர் பழியை துாக்கி போட்டுருவாங்க என்பதில், 'டவுட்' இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்' என்றனர். இப்போது, புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார். அரசு ஊழியர்கள் கேட்டது பழைய ஓய்வூதிய திட்டம். ஆனால், ஸ்டாலின் குறிப்பிடுவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்; பெயரை மாற்றி ஏமாற்றுகிறார். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தடுக்க, தந்திரமாக இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.
டவுட் தனபாலு: 'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம்'னு, 2011ல் உங்க தலைவி ஜெ.,யும் வாக்குறுதி தந்தாங்களே... அவங்களும் அதை நிறைவேற்றலை... அவங்களுக்கு பின், 2017 முதல் 2021 வரை நாலு வருஷம் முதல்வராக இருந்த நீங்களும் அதை நிறைவேற்றாமல் இருந்துட்டு, இப்ப ஸ்டாலின் கொண்டு வந்ததை குறை கூறுவது முறையா என்ற, 'டவுட்' வருதே!

