PUBLISHED ON : ஜன 09, 2026 03:18 AM

திரைப்பட இயக்குநர் பேரரசு: நாட்டில் நடக்கும் தொடர் வன்முறைகளுக்கு அரசையும், அரசியல்வாதிகளையும், காவல் துறை மற்றும் சமூக அவலங்களை மட்டும் குறை சொல்கிறோம். ஆனால், இதற்கு சில சினிமாக்களும் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். தற்போது வெளிவரும் சில படங்களில், வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளன. அதுபோன்ற படங்களுக்கு, குழந்தைகளை அழைத்து செல்லவே முடியவில்லை. வன்முறையை துாண்டும், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும், பிரிவினை வாதம், ஆபாச வசனங்கள் மற்றும் படம் முழுதும் மது குடித்து கொண்டே இருக்கும் காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள் தான் அதிகம் வருகின்றன.
டவுட் தனபாலு: சபாஷ்... சரியா சொன்னீங்க... எதிரிகளை விதவிதமா துன்புறுத்துவது எப்படி, கொடூரமா கொல்வது எப்படி என்பதை தற்போது வரும் சினிமாக்களில் பார்த்து தான், நிறைய ரவுடிகள் உருவாகுறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம், 'கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்துட்டே கல்லெறிகிறார்'னு உங்களை சினிமா துறையினரே வசைபாடுவாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மனமில்லாமல், 'சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது' என, தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது, கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர்.
டவுட் தனபாலு: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண் பக்தர்களை அனுமதித்த மார்க்சிஸ்ட் கம்யூ., அரசுக்கு, 2019 லோக்சபா தேர்தலில், அந்த மாநில மக்கள் மரண அடி கொடுத்தாங்க... அதுபோல, வரும் சட்டசபை தேர்தலில், திருப்பரங்குன்றம் விவகாரம், தி.மு.க., அரசுக்கு நல்ல பாடம் கற்று தரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: 'மது குடிக்க பணம் கேட்டு தாக்கிய மகனை கொலை செய்த பெற்றோர்; மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்து கொன்ற மகன்; மது குடித்து விட்டு தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி சிறைக்கு சென்றதால், அனாதைகளான மூன்று குழந்தைகள்' என, செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் தன் பொறுப்பை தட்டிக்கழிக்காமல், படிப்படியாக மதுக் கடைகளை மூட வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க மகன் அன்புமணி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமாகிட்டாரு... உங்க முன்னாடி இருப்பது தி.மு.க., மற்றும் த.வெ.க., தான்... அதனால, 'மதுக் கடைகளை மூடுறதா சொல்ற கட்சியுடன் தான் கூட்டணி' என, நீங்க நிபந்தனை விதித்து பார்த்தால் என்ன என்ற, 'டவுட்' வருதே!

