PUBLISHED ON : ஏப் 06, 2024 12:00 AM

'ஏதாவது ஒரு கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; இல்லையெனில் இப்படித் தான் அவமானப்பட வேண்டியிருக்கும்...' என, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோருக்கு நெருக்கமானவர்.
சில மாதங்களுக்கு முன் ம.பி.,யில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடம் தோல்வி அடைந்த பின், கமல்நாத்தின் மனதில் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டன. அவர், பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வெளியானது. இதற்காக ஒரு வாரத்துக்கும் மேலாக டில்லியில் முகாமிட்டு ரகசிய பேச்சு நடத்தினார்.
ஆனால், பேச்சு தோல்வி அடைந்ததால், சத்தமில்லாமல் மீண்டும் ம.பி.,க்கு வந்து காங்கிரசுக்காக பணியாற்றி வருகிறார். அவரது மகன் நகுல்நாத், ம.பி.,யில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அவருக்கு காங்கிரசாரிடையே போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால், தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கமல்நாத்தும், அவரது மகனும் திணறி வருகின்றனர்.
இங்குள்ள காங்., நிர்வாகிகளோ, 'பா.ஜ., தலைவர்களுடன் நடத்திய பேரம் படியாததால், மீண்டும் காங்கிரசுக்கு வந்தவருக்கு, எங்களால் தேர்தல் வேலை பார்க்க முடியாது...' என்கின்றனர்.
'பாவம்; முன்னாள் முதல்வருக்கு இப்படி ஒரு நிலையா...' என, கமல்நாத்தை நினைத்து பரிதாபப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.

