/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
குறைந்த பராமரிப்பில்அதிக லாபம் தரும்மிதி பாகல் சாகுபடி!
/
குறைந்த பராமரிப்பில்அதிக லாபம் தரும்மிதி பாகல் சாகுபடி!
குறைந்த பராமரிப்பில்அதிக லாபம் தரும்மிதி பாகல் சாகுபடி!
குறைந்த பராமரிப்பில்அதிக லாபம் தரும்மிதி பாகல் சாகுபடி!
PUBLISHED ON : டிச 31, 2025 01:51 AM

கடலுார் மாவட்டம், வண்டுராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அரவிந்தன்:
கடலுார் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, புவனகிரி மிதி பாகல் எனும் சிறிய பாகற்காய். இம்மாவட்டத்தின் பாரம்பரிய பெருமை கொண்ட பண்ருட்டி பலா, முந்திரி பயிர்களின் வரிசையில் மிதி பாகலும் முக்கிய இடம் வகிக்கிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணமும், மற்ற பாகற்காயை விட அதிக சுவையும் கொண்டது, மிதி பாகல்.
படிப்பை ஒன்பதாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு, முழுநேரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் பகுதியில் பல தலைமுறைகளாக மிதி பாகல் சாகுபடி நடந்து வருகிறது. இங்கு விளையக்கூடிய மிதி பாகற்காய்களை கடலுார் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்ட மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
குறைந்த முதலீட்டில், குறைவான பராமரிப்பில் அதிக லாபம் தரக்கூடிய பயிர் இது. விதைத்த 45 - 55 நாட்களில் காய்கள் பறிக்கலாம். 3 - 4 மாதங்கள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். முதிர்ச்சி அடைந்த காய்களை நன்றாக பழுக்கவிட்டு, அதில்இருந்து விதைகளை சேகரித்து மறு ஆண்டு சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.
இந்த ரக காய்கள், 1 அங்குலத்துக்கும் குறைவான நீளத்தில், குண்டலம் போல் உருண்டையாகவும், சின்னதாகவும் இருக்கும். பாகல் கொடிகளின் இலைகள் மாதிரியே காய்கள் பச்சை நிறத்திலும், மிகவும் சின்னதாகவும் இருப்பதால், அடர்ந்து படர்ந்த கொடிகளுக்கு இடையில் காய்களை கைகளால் தேடிக் கண்டுபிடித்து பறிப்பது மிகவும் சிரமம்.
அதனால், கொடிகளை காலால் மிதித்து, தடவி பார்த்து அறுவடை செய்வோம். இதனால் தான் இதற்கு, 'மிதி பாகல்' என்று பெயர் வந்ததாக பெரியோர் கூறுவர். கொடிகளை மிதிப்பதால், காய்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது.
தினமும் காய்களை பறித்து விடவேண்டும். ஒரு நாள் தாமதம் ஆனால் கூட, பழுத்துவிடும். காய்களை அறுவடை செய்த அன்றே, வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். 1 கிலோவுக்கு குறைந்தபட்சம், 30 ரூபாய் முதல் அதிகபட்சம் 80 ரூபாய் வரை கிடைக்கும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பல ஏக்கர் பரப்பில் மிதி பாகல் சாகுபடி செய்கிறேன். கடந்தாண்டு, 5 ஏக்கரில் சாகுபடி செய்தேன். 1 ஏக்கருக்கு சராசரியாக, 2,200 கிலோ வீதம், 11,000 கிலோ காய்கள் கிடைத்தன. 1 கிலோவுக்கு சராசரியாக, 50 ரூபாய் வீதம், 5.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
சாகுபடி செலவுகள் போக, 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. நடப்பாண்டும், மிதி பாகல் சாகுபடி வாயிலாக நல்ல லாபம் கிடைத்து வருகிறது.தொடர்புக்கு 85265 51266

