/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அவமானத்தை என் வெற்றியால் துடைத்திருக்கிறேன்!
/
அவமானத்தை என் வெற்றியால் துடைத்திருக்கிறேன்!
PUBLISHED ON : ஜன 01, 2026 01:27 AM

எந்த
பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல், வீட்டிலிருந்தே போட்டி
தேர்வுகளுக்கு படித்து, 'குரூப் 4' தேர்வில், மாநில அளவில், 2ம் இடம்
பிடித்துள்ள, சென்னையைச் சேர்ந்த, 34 வயதான புனிதா ஜோஸ்பின்:
என்
சொந்த ஊர், தென்காசி மாவட்டம், கருத்தப்பிள்ளையூர் கிராமம்.
எங்கள் குடும்பத்தில், முதல் தலைமுறை பட்டதாரி நான்; பொறியியல்
படித்திருக்கிறேன். அம்மா இறந்த பின், என் அக்கா, நான், தம்பி ஆகியோரை
வளர்த்து ஆளாக்க, அப்பா பட்ட கஷ்டங்கள் அதிகம்.
கல்லுாரி
முடித்ததும், வங்கி தேர்வுகளுக்கு படிக்க முடிவு செய்தேன்.
தென்காசியில் உள்ள பிரபலமான போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில்
சேர்வதற்காக சென்றிருந்தோம்.
எங்கள் தோற்றத்தை
பார்த்துவிட்டு, அங்கிருந்தோர் எங்களை மரியாதையே இல்லாமல்
நடத்தினர். கூனிக்குறுகி வெளியே வந்தோம். அது, அரசு வேலை மீது
இன்னும் தீவிரத்தை எனக்கு ஏற்படுத்தியது.
இதனால்,
வீட்டில் இருந்தே படிக்க ஆரம்பித்தேன். ஆனால், வங்கி தேர்வு என்றால்
என்ன, எப்படி படிக்க வேண்டும் என்பது புரியவே ஓராண்டு ஆனது.
ஓராண்டுக்குள், என்னால் எந்த போட்டி தேர்விலும் தேர்ச்சி அடைய
முடியவில்லை. இதனால், திருமணம் செய்து வைத்து விட்டனர்.கணவர்
சென்னை என்பதால், இங்கு குடியேறினேன். எங்களுக்கு இரு
குழந்தைகள். அவர்கள் பள்ளிக்கு சென்ற பின், மீண்டும் வங்கி
தேர்வுக்கு தயாரானேன்.
ஐந்து ஆண்டு இடைவெளி ஆகிவிட்டதால்,
எல்லாமே புதிதாக இருந்தது. அந்த நேரத்தில், எங்கள் உறவினர் ஒருவர்,
தமிழக அரசு பணிக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்தார். நானும் அதேபோல்
படிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.
என்னை
ஊக்கப்படுத்தி, தேவையான புத்தகங்கள் வாங்கி கொடுத்தார் கணவர்.
தேவையான தகவல்களை சமூக வலைதளங்களில் தேடி படித்தேன். அப்போது தான்,
தமிழக அரசின், 'யு டியூப் சேனல்' குறித்து தெரிந்தது. அதில் எல்லா
பாடங்களையும் வீடியோக்களாக பதிவேற்றி இருந்ததால், அந்த சேனலை என்
குருவாக நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.
குரூப் 4
தேர்வுக்கான அறிவிப்பு வந்ததும் ஆறு மாதங்கள், நேரம் காலம் பாராமல்
படிக்க ஆரம்பித்தேன். தேர்வில் தேர்ச்சி பெறுவேன், வேலை கிடைக்கும்
என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், மாநில அளவில் 2ம் இடம் வருவேன் என்று
நினைத்துக் கூட பார்க்கவில்லை.
'வீட்டில் இருந்து படித்தால்
தேர்வில் வெற்றி பெற முடியுமா?' என கேட்போருக்கு, என் வெற்றி தான்
பதில். 10 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு நடந்த அவமானத்தை, இந்த
வெற்றி வாயிலாக துடைத்திருக்கிறேன்.
இந்த வெற்றி, என் அப்பாவுக்கு நான் கொடுக்கும் பரிசு. இந்த, 34 வயதில், எனக்கான புதிய பணி ஆரம்பித்திருக்கிறது.

