/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மல்லிகை சாகுபடியில் நஷ்டமே வராது!
/
மல்லிகை சாகுபடியில் நஷ்டமே வராது!
PUBLISHED ON : ஜன 02, 2026 02:02 AM

மதுரை மாவட்டம் தாடையம்பட்டியில், 1.5 ஏக்கரில், மல்லிகை பூ சாகுபடி செய்து வரும் பாண்டியன்: மல்லிகை விவசாயத்தில் வருமானம் கொட்டும். இதில் நஷ்டம் என்பதே வராது. தக்காளி, கத்தரிக்காய் போன்றவை அழுகினால், சாலைக்கு வந்து விடும்.
ஆனால், இந்த பூக்கள் மட்டும் எந்த நிலையில் இருந்தாலும், வியாபாரிகள் வாங்கி செல்வர். பூக்கள் அனைத்தும், 'சென்ட்' தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
குறைந்தது, 1 கிலோவுக்கு 200 ரூபாய் வரை கிடைக்கும். அதிகபட்சம், 2,000 ரூபாயை தாண்டும். நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 1 ஏக்கர் நிலத்தில் மல்லிகை நடவு செய்ய முடிவு செய்தேன்.
ராமேஸ்வரத்தில் இருந்து நாற்றுகள் வாங்கி வந்து, நடவு செய்தேன்.
இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆறாவது மாதத்தில் இருந்து வருமானம் கிடைக்கிறது. தினமும், 10 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.
அடுத்தாண்டில் இருந்து தினமும், 50 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
மல்லிகை பூ விவசாயம் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளன. மாதந்தோறும் குறைந்தது, 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. முன்கூட்டியே இந்த தொழிலை செய்திருந்தால், இன்னும் பல லட்சங்களை சம்பாதித்திருக்கலாம்.தினமும், 10 பேருக்கு வேலை தருகிறேன். அவர்களுக்கு முன்பணம் கொடுத்து தக்க வைத்திருக்கிறேன். வேலையாட்கள் காலை 6:00 மணிக்குள்ளாகவே தோட்டத்துக்கு வந்து விடுவர்.
அன்று முழுதும் அவர்கள் பறித்த பூக்களை, உசிலம்பட்டியில் இருக்கும் சந்தையில் அன்றைய விலை என்னவோ, அதன்படி எடை போட்டு விற்கிறேன். ஒரு நாளைக்கு மூன்று முறை, உசிலம்பட்டிக்கு சென்று விற்பனை செய்கிறேன்.
திருமணம், திருவிழா காலங்களில் மல்லிகை பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் பூக்கள் அதிகம் கிடைத்தால், அதை எங்கள் தெய்வம் மதுரை பாண்டி முனீஸ்வரன் கொடுத்த வரமாகத்தான் நினைப்பேன். இன்றைக்கு நல்ல பொருளாதார முன்னேற்றம் பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் மல்லிகை விளைச்சல் தான்.
இந்த வருமானத்தில் தான், என் மகனை கோவையில் உள்ள பிரபல கல்லுாரியில் படிக்க வைத்திருக்கிறேன். ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் கல்வி கட்டணம் கட்டுகிறேன். மல்லிகை தோட்டம் இருந்தால், மதிக்காத மனிதனும் நம்மை மதிப்பான்.
தொடர்புக்கு: 97869 39614

