/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உயர்ந்த பொறுப்பில் நாட்டுக்கு சேவைகள் செய்ய ஆசை!
/
உயர்ந்த பொறுப்பில் நாட்டுக்கு சேவைகள் செய்ய ஆசை!
உயர்ந்த பொறுப்பில் நாட்டுக்கு சேவைகள் செய்ய ஆசை!
உயர்ந்த பொறுப்பில் நாட்டுக்கு சேவைகள் செய்ய ஆசை!
PUBLISHED ON : ஜன 03, 2026 01:37 AM

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும், தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த, 25 வயதான பிரியங்கா: அப்பாவும் அம்மாவும், என் இரண்டாவது வயதிலேயே பிரிந்து விட்டனர். என் தம்பி, அப்போது ஆறு மாத குழந்தை. பொருளாதார தேவைக்காக அம்மா, கேரளாவில் ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். நானும் தம்பியும், தாத்தா - பாட்டியுடன் தான் வளர்ந்தோம்.
பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் தான் படித்தேன். நன்கு படித்து நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அதனால், ஒரு தொண்டு நிறுவனம் வாயிலாக, கலை, அறிவியல் கல்லுாரியில் இளங்கலை கணிதம் படித்தேன்.
படித்துக் கொண்டிருந்தபோதே, 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி கிடைத்தது. அதேசமயம் மேற் படிப்பு படிக்கும் வாய்ப்பும் வந்தது. நான் முதுகலை சமூகப்பணி படிப்பை தேர்ந்தெடுத்தேன்.
படித்துக்கொண்டு இருந்தபோதே, 18,000 ரூபாய் உதவித்தொகையுடன், களப்பயிற்சியும் மேற்கொண்டேன். இதுதான் எனக்கு கிடைத்த முதல் சம்பளம்.
நீலகிரி மலையில் உள்ள கடைக்கோடி மலைக் கிராம குழந்தைகளுக்கு, படிப்புக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தேன். படிப்பு முடியும்போது, என் ஆர்வம், சீருடை பணி மீது திரும்பியது.
விடாமுயற்சி, கடினமான பயிற்சி, உடல் வலிமைக்கான பயிற்சி என, போராட்டமான அந்த காலத்தை கடந்து, போட்டித் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்பதால், சித்தாள் வேலையும் பார்த்தேன். ஒரு வழியாக, 2023ல் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தேன்.
ஓராண்டு காலம் அசாமில் பயிற்சி முடித்து, தற்போது, பீஹார் - நேபாள எல்லையில் வேலை பார்த்து வருகிறேன்.
என் மு தல் சம்பளம் என்பது, வெறும் பணமில்லை. என் முயற்சிகள், போராட்டங்கள், என் குடும்பத்தாரின் கண்ணீர், நம்பிக்கைக்கு கிடைத்த வெகுமதி. இப்போது, நாட்டின் பாதுகாப்பில் நானும் ஒரு பங்கேற் பாளராக நிற்கிறேன்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஒன்பது மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து விட்டேன். பிளஸ் 2 முடித்திருந்த ஐந்து மாணவர்களை வழிநடத்தியதில், தற்போது அவர்கள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
என் அம்மா, தாத்தாவுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்திருக்கிறேன். இதையும் தாண்டி, என் தனிப்பட்ட முன்னேற்றத்துக்கான முதலீடுகள், தம்பியின் படிப்பு என, நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் என்னுடைய வேலையும், சம்பளமும் கொடுத்தது தான்.
இத்துடன் என் கனவு முடிந்து விடவில்லை. உயர்ந்த பொறுப்பிற்கு சென்று, நாட்டிற்கு நிறைய சேவைகள் செய்ய வேண்டும். என்னால் முடிந்த சமூக பணிகளை செய்ய வேண்டும்!

