/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பனையோலை திருமண அழைப்பிதழுக்கு அதிக வரவேற்பு!
/
பனையோலை திருமண அழைப்பிதழுக்கு அதிக வரவேற்பு!
PUBLISHED ON : ஜன 04, 2026 02:32 AM

பனை ஓலைகளில் திருமண அழைப்பிதழ், தாம்பூல பை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த ரஞ்சிதா: நான் பிறந்து வளர்ந்து, படித்ததெல்லாம் சென்னை தான். 'சிவில் இன்ஜினியரிங்'கில் பட்டய படிப்பு முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். கொரோனா ஊரடங்கு காலத்தில், இயற்கை சார்ந்த வாழ்வியல் முறையில் ஆர்வம் பிறந்தது.
நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கவும், காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தவும், பனை மரங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்; அதற்காக, பனை சார்ந்த பொருட்களை மக்கள் மத்தியில் பரவலாக்க வேண்டும் என்று தோன்றியது.
அந்த சமயத்தில், சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், பனையோலை பொருட்கள் தயார் செய்ய பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. 500 ரூபாய் செலுத்தி அதில் பங்கேற்றேன்.
தினமும் பல மணி நேரம் சமூக வலைதளங்களை பார்த்தும், சொந்த முயற்சியிலும், பனையோலையில் கைவினை பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டேன்.
அலங்கார பொருட்கள், அஞ்சறை பெட்டி, வாயில் தோரணம், அர்ச்சனை கூடை, இடியாப்ப தட்டு, வெற்றிலை பெட்டி உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்தேன்; அமோக வரவேற்பு கிடைத்தது.
பனையோலையில் செய்யப்படும் திருமண அழைப்பிதழ்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. 'ஸ்கிரீன் பிரின்ட்' மற்றும் 'லேசர் பிரின்ட்' வாயிலாக வாசகங்களை அச்சடித்து, அழைப்பிதழ் செய்கிறோம்; மணமக்களின் படங்களையும் கூட அச்சிட்டு கொடுக்கிறோம்.
'எழுத்தாணி வாயிலாக வாசகங்களை எழுதி கொடுத்தால், மிகவும் இயல்பாகவும், பழமை மாறாமலும் இருக்கும்' என, சிலர் கேட்டனர்.
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சிலர், மதுரையில் இதற்கான பயிற்சி கொடுப்பதாக தகவல் கிடைத்தது. 2,500 ரூபாய் கட்டணம் செலுத்தி, பனையோலையில் எழுத்தாணி வாயிலாக எழுத கற்றுக்கொண்டேன்.
பனையோலைகளை ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்கிறோம். அதை வெயிலில் காய வைத்து பதப்படுத்தி, சாயத்தில் நனைத்து, மறுபடியும் காய வைத்து பொருட்கள் தயார் செய்கிறோம்.
பனையோலை பொருட்கள் தயார் செய்வதற்காக, ஆறு பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு தொடர்ச்சியாக வேலையும் கொடுத்து வருகிறேன்.
இந்த தொழிலில் மாதம் சராசரியாக, 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. செலவுகள் போக, 35,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு
91235 20390
உழைப்பு நம்மை உயரத்தில் நிறுத்தும்!
'நறுமுகை' என்ற நிறுவனத்தை துவக்கி, மூலிகை நாப்கின், சோப், தலைமுடி சாயம் ஆகியவற்றை தயாரித்து, ஆறு ஆண்டுகளாக விற்பனை செய்து வரும், மயிலாடுதுறையைச் சேர்ந்த தாரணி: எனக்கு பூர்வீகம் திருச்சி. பள்ளி படிப்பை முடித்ததும், திருமணம் செய்து வைத்து விட்டனர்.
கணவரின் ஊரான மயிலாடுதுறைக்கு குடிபெயர்ந்தேன். ஒரு நிறுவனத்தில் தினக்கூலி வேலைக்கு சென்று வந்தேன். அப் போது, எனக்கு சிறுநீர் பாதையில் தொற்று பாதிப்பு வந்தது.
அதன் தொடர்ச்சி யாக, வேறு சில ஆரோக்கிய குறைபாடுகளை எதிர்கொண்டேன். சிகிச்சையின் போதே, ரசாயனம் குறைந்த நாப்கினும், சுத்தமான கழிப்பறையையும் பயன்படுத்த சொல்லி, மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
சந்தையில் கிடைக்கிற பெரும்பாலான நாப்கின்களில் ரசாயனம் இருந்தது. அதனால், மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்து, அரசு வழங்கிய இலவச பயிற்சியில் பங்கேற்று, நாப்கின் செய்ய கற்றுக் கொண்டேன்.
பருத்தி, கற்றாழை, துளசி, ஜாதிக்காய், வேப்பிலை, வசம்பு, வெட்டிவேர், ரோஜா இதழ், ஆவாரம்பூ போன்ற மூலப்பொருட்களை வைத்து, மூலிகை நாப்கின்கள் தயாரிக்க ஆரம்பித்தேன். இந்த நாப்கின், இரு மாதங்களிலேயே மட்கும் தன்மை கொண்டது.
நானும், என் தங்கையும், 10,000 ரூபாய் முதலீட்டில், வீட்டில் இருந்து தான் நாப்கின்கள் தயாரித்தோம். அதன்பின், சுய உதவிக்குழு வாயிலாக, 1 லட்சம் ரூபாய் வளர்ச்சி நிதி கிடைத்தது.
அந்த தொகையை இயந்திரங்கள் வாங்க முதலீடு செய்தோம். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கவே, தனி இடம் எடுத்து நாப்கின்கள் தயாரிக்க ஆரம்பித்தோம்.
இடையில், என் கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். என் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, சீக்கிரம் மீண்டு வந்து இயங்க ஆரம்பித்தேன்.
நாப்கின்கள் மட்டுமல்லாது, சோப், குளியல் பொடி என பல பொருட்களை தயாரித்து, சமூக வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
எங்கள் பொருட்களின் தரத்தை பார்த்து, மருத்துவமனைகளில் இருந்து, 'ஆர்டர்'கள் வந்தன. இப்போது வெளிநாடு களில் இருந்து கூட எங்கள் நாப்கின்களை வாங்குகின்றனர்.
ஒவ்வொரு மாதமும், 6,000 நாப்கின்கள், 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் சோப்புகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறோம். மாதத்திற்கு, 1.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
ஒரு காலத்தில், எதிர்காலம் என்ன என்று தெரியாமல் தவித்த நான், இப்போது என் நிறுவனத்தின் எதிர்கால இலக்குகளை தீர்மானிக்கும் தொழில் முனைவோராக வளர்ந்திருக்கிறேன். தேங்காமல் ஓடியபடியே இருந்தால், உழைப்பு நம்மை உயரத்தில் நிறுத்தும்!
தொடர்புக்கு
90038 64639

