PUBLISHED ON : ஏப் 14, 2024 12:00 AM

'எல்லாரும் கைவிரித்தால் எப்படி கட்சி நடத்த முடியும்...' என புலம்புகிறார், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன்.
இவர், தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்கு செல்வதற்கு முன், தன் கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரனை முதல்வராக்கி விட்டுச் சென்றார்.
தற்போது, லோக்சபா தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை வழி நடத்துவதற்கும், தேர்தல் வியூகத்தை வகுப்பதற்கும் ஆள் இல்லாத சூழல் நிலவுகிறது.
முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், 'அரசு பதவியை வேண்டுமானால் வகிக்க தயார். கட்சி பதவி வேண்டவே வேண்டாம். மத்திய அரசின் கோபப் பார்வையில் சிக்கி, சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்...' என, பயப்படுகின்றனர்.
இதனால், கேப்டன் இல்லாத கப்பல் போல் தள்ளாடுகிறது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. கட்சியின் மூத்த தலைவர்களில் சிலர், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவை உசுப்பேற்றி விட்டு, 'நீங்கள் தான் கட்சிக்கு தலைமை வகிக்க வேண்டும். உங்களை விட்டால், எங்களுக்கு வேறு நாதியில்லை...' என, அவரது காலில் விழுந்து கெஞ்சுகின்றனர்.
இதைப் பார்த்து கல்பனாவுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது. கூடிய விரைவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைமை பதவியை அவர் ஏற்கலாம் என பேச்சு அடிபடுகிறது.
எதிர்க்கட்சியினரோ, 'குடும்பத்துடன் சிறைக்கு செல்ல தயாராகி விட்டனர் போலிருக்கிறது...' என, கிண்டலடிக்கின்றனர்.

