PUBLISHED ON : மே 10, 2024 12:00 AM

'யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை; அவர் மட்டும் ஜெயிக்க கூடாது...' என மேற்கு வங்க மாநில காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பற்றி கூறுகிறார், அந்த மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி.
காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உட்பட, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து, பா.ஜ.,வுக்கு எதிராக, 'இண்டியா' என்ற பெயரில் லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன.
இந்த கூட்டணி உருவானதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், மம்தா பானர்ஜி. ஆனால், கடைசியில் மம்தாவின் மேற்கு வங்கத்தில் மட்டும் இந்த கூட்டணி அமையாமல் போய் விட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. காங்கிரசுக்கு மம்தா விட்டுக் கொடுத்த ஒரு சில தொகுதிகளை ஏற்க அவர் மறுத்து விட்டார்.
இதனால், மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி ஒரு அணியாகவும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இங்குள்ள பஹராம்பூர் தொகுதியில் காங்., சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடுகிறார்.
இதற்கு முன், இதே தொகுதியில் அவர் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்த முறை அவர் வெற்றி பெறவே கூடாது என, தன் முழு அதிகார, பண பலத்தையும் அங்கு இறக்கி விட்டுள்ளார், மம்தா.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரியோ, 'மம்தாவின் அதிகாரம் என்னிடம் எடுபடாது. இந்த முறையும் வெற்றி பெற்று, அவரது முகத்தில் கரியை பூசுவேன்...' என, கொக்கரிக்கிறார்.