PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

'இந்த முறை கொஞ்சம் அதிக நெருக்கடியாகத் தான் இருக்கும் போலிருக்கிறது...' என கவலைப்படுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில் மொத்தம், 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. லோக்சபா தேர்தல்களிலும் இந்த இரண்டு கட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கடந்த லோக்சபா தேர்தலின் போதும், பினராயி விஜயன் தான் முதல்வராக இருந்தார். இதனால், இடதுசாரி கட்சிகள் எப்படியும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிட்டதால், ஒட்டுமொத்த கேரளாவிலும் ராகுல் அலை வீசியது. இதில், இடதுசாரி கூட்டணி காணாமல் போய் விட்டது. ஒரு தொகுதியில் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடிந்தது. மீதமுள்ள, 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன.
இந்த முறையும் ராகுல் வயநாட்டில் போட்டியிடுகிறார். இதனால், கடந்த தேர்தல் முடிவுகள் தற்போதும் எதிரொலிக்குமோ என, பினராயி விஜயன் பயப்படுகிறார்.
அவரது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களோ, 'ஆளுங்கட்சியாக இருந்தும், லோக்சபா தேர்தலில் இந்த தடவையும் கோட்டை விட்டால், முதல்வரை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை...' என, பற்ற வைக்கின்றனர்.
இதனால் கலக்கத்தில் உள்ள பினராயி விஜயன், 'தலைக்கு மேல் கத்தி தொங்குகிறதே...' என, புலம்புகிறார்.

