PUBLISHED ON : டிச 08, 2025 02:34 AM

'தலைவர்கள் எல்லாம் இப்படித் தான் இணக்கமாக இருப்பர்; தொண்டர்கள் தான் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு வருகிறோம்...' என புலம்புகின்றனர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்கிரசின் நிறுவனரும், மஹாராஷ்டிராவின் பழம்பெரும் அரசியல்வாதியுமான சரத் பவாரிடமிருந்து, கட்சியையும், சின்னத்தையும், அவரது உறவினர் அஜித் பவார் சில ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றினார்.
அதையடுத்து, தற்போதைய மஹாராஷ்டிரா அரசில், அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார். இதனால், தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அம்மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் தலைமையில், 'தேசியவாத காங்கிரஸ் - சரத் சந்திர பவார்' என்ற கட்சி செயல்படுகிறது.
சரத் பவாரின் பேரன் ரோஹித் பவார், அந்த கட்சியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அஜித் பவாரும், ரோஹித் பவாரும், ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக கடுமையாக தாக்கிப் பேசுவது வழக்கம்.
இதனால், இவர்களது ஆதரவாளர்களும் மோதல் போக்கை பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் சரத் பவாரின் உறவினர் ஒருவருக்கு நடந்த திருமண நிகழ்ச்சியில், அஜித் பவாரும், ரோஹித் பவாரும் இணைந்து, ஹிந்தி திரைப்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட, 'வீடியோ' பரவியது.
இதை பார்த்து அதிர்ந்து போன அஜித் மற்றும் ரோஹித் பவார் ஆதரவாளர்கள், 'நாம் தான் ஏமாளிகளாகி விட்டோம்...' என, கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

