PUBLISHED ON : டிச 07, 2025 03:38 AM

'இவர், கட்சியை விட்டு விலகவும் மறுக்கிறார்; மேலிடமும், இவரை நீக்க மறுக்கிறது. என்ன செய்வது என தெரியவில்லையே...' என்று, காங்கிரஸ் எம்.பி., சசி தரூரை நினைத்து புலம்புகின்றனர், அந்த கட்சியின் எம்.பி.,க்கள் சிலர்.
கேரளாவைச் சேர்ந்த சசி தரூர், ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, சசி தரூரை அரசியலுக்கு அழைத்து வந்தார்.
இவர், கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து, இதுவரை, நான்கு முறை, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீப காலமாக இவர், பா.ஜ., மீது பாசம் காட்டி வருகிறார். இது, காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து, சமீபத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டதால், சபை முடங்கியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், 'நாட்டில் விவாதத்துக்கு உரிய, மிக உயர்ந்த இடமாக பார்லிமென்ட் திகழ்கிறது. ஆனால், தற்போது அதன் மாண்பு குறைக்கப்பட்டு, சீர்குலைந்து வருகிறது. தொடர்ந்து சபைகள் முடக்கப்படுவது, நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரிய தீங்கை ஏற்படுத்தும்...' என்றார்.
இதனால், கோபம் அடைந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள், 'சசி தரூர், பா.ஜ.,வில் சேர்ந்து விடலாமே; எதற்கு காங்கிரசில் இருந்து கொண்டு குடைச்சல் கொடுக்கிறார்...' என, ஆவேசப்படுகின்றனர்.

