PUBLISHED ON : டிச 09, 2025 03:06 AM

'உடன் இருப்பவர்களே கிண்டல் அடிக்கும் அளவுக்கு நம் நிலைமை மோசமாகி விட்டதே...' என, கண்ணீர் வடிக்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.
கடந்த, 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள, காங்கிரஸ் தலைமையில், 'இண்டியா ' கூட்டணி அமைக்கப்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
ஆரம்பத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார், அங்கிருந்து வெளியேறி, தே.ஜ., கூட்டணியில் இணைந்தார்.
திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியும் அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து கழன்றன. 2024 லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி படுதோல்வி அடைந்தது.
தற்போது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேற முயற்சித்து வருகிறது. இப்படி, தொடர் தோல்விகளால் ஒவ்வொரு கட்சியாக, 'இண்டியா' கூட்டணிக்கு, 'டாட்டா' காட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா, சமீபத்தில் ஒரு விழாவில் பேசுகையில், 'எங்கள் கூட்டணி, தற்போது, ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளது...' என்றார்.
காங்கிரஸ் நிர்வாகிகளோ, 'இன்னும் சில மாதங்களானால், 'இண்டியா' கூட்டணியில் நாம் மட்டுமே இருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுவோம் போலிருக்கிறது...' என, புலம்புகின்றனர்.

